சென்னை பொறுப்பாளராக ஆதவ்: தி.மு.க.,வை வீழ்த்த விஜய் வியூகம்

சென்னை: சட்டசபை தேர்தலில், தி.மு.க., – அ.தி.மு.க., தலைமையில் இரண்டு அணிகளும், நாம் தமிழர், த.வெ.க., உள்ளிட்ட இரண்டு கட்சிகள் தனி அணியாகவும் போட்டியிடும் சூழல் நிலவுகிறது. இதனால், நான்கு முனை போட்டி ஏற்படும் வாய்ப்புள்ளது.

பல தொகுதிகளில் குறைந்த அளவிலான ஓட்டுகளே, வெற்றியை நிர்ணயிக்கும் வாய்ப்புள்ளது. ஜெயலலிதா ஆட்சியில் தி.மு.க.,வின் கோட்டையாக இருந்த சென்னையை, அ.தி.மு.க., கைப்பற்றியது. ஜெயலலிதா மறைவிற்கு பின், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் தி.மு.க., கோலோச்சி வருகிறது.

அடித்தட்டு மக்கள் அதிகமுள்ள இம்மாவட்டங்களில், தனக்கு அதிகளவு வெற்றி வாய்ப்புள்ளதாக த.வெ.க., தலைவர் விஜய் கணக்கு போடுகிறார். இந்நிலையில், முதன்மை தேர்தல் கண்காணிப்பாளர்களாக, த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனாவை விஜய் நியமித்துள்ளார்.

ஆதவ் ஆர்ஜுனாவுக்கு, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இங்கு த.வெ.க., படை பலம், பண பலத்தையும் பயன்படுத்தி வெற்றி பெற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காகவே ஆதவ் அர்ஜுனாவை, விஜய் களமிறக்கியுள்ளார் என த.வெ.க., வட்டாரங்கள் கூறின.

Source link