சென்னை: போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் உள்ள ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.
ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ரூ.2 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருட்கள் கடத்தியதாக, திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் பதிவு செய்து இருந்தனர்.
தற்போது அவர் ஜாமினில் உள்ளார். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 06) ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். சென்னையில் ஜேஎஸ்எம் விடுதி உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நடந்தது. வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் பதுக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் சோதனை நடத்தப்பட்டதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
