சென்னை: போராடி தொகுதியை பெற்றாக வேண்டும். போராடி நிதியை திரட்ட வேண்டும். 25 ஆண்டுகளை கடந்து வந்தாலும் கூட இந்த

சென்னை: போராடி தொகுதியை பெற்றாக வேண்டும். போராடி நிதியை திரட்ட வேண்டும். 25 ஆண்டுகளை கடந்து வந்தாலும் கூட இந்த களம் இன்னும் நமக்கு புதிதாகத்தான் இருக்கிறது என விடுதலை சிறுத்தைக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


விசிக தொண்டர்களுக்கு வீடியோ கான்பரன்சிங் வாயிலாக திருமாவளவன் பேசியதாவது: மிக குறைவான எண்ணிக்கையை நாம் பெற்றாலும் கூட அது, நம்முடைய அரசியல் உறுதிப்பாட்டை மேலும் உறுதிப்படுத்துவதாக அமையும் என்ற நம்பிக்கையுடன் தேர்தலுக்கு தயாராகுவோம். போராடி தொகுதியை பெற்றாக வேண்டும். போராடி நிதியை திரட்ட வேண்டும். நெருக்கடி இடையில் வேட்பாளர்களை தேர்வு செய்யக்கூடிய பணிச்சுமைகள் இருக்கிறது.

நான் இவ்வளவு வெளிப்படையாக தெரிவிக்கக் காரணம், 25 ஆண்டுகளை கடந்து வந்தாலும் கூட இந்த களம் இன்னும் நமக்கு புதிதாகத்தான் இருக்கிறது. இன்னும் அதற்கு நாம் நம்மை தகவமைத்துக் கொள்ளவில்லை சமூகச் சூழலும் நமக்கு ஏதுவாக அமையவில்லை. நாம் எந்த வகையிலும் வலிமை பெற்றுவிடக்கூடாது என்று கருதுகிறவர்களின் எண்ணிக்கைதான் பெரும்பான்மை. அரசியல் சக்தியாக பரிணமிக்கக்கூடாது என்று எண்ணுகிறவர்கள்தான் இங்கு பெரும்பான்மை.

ஜனநாயக கடமை

இவர்கள் வளர்வதற்கோ, வாழ்த்துவதற்கோ, ஊக்கப்படுத்துவதற்கோ பெரிதாக யாரும் இல்லை என்பதுதான் உண்மை. ஆனாலும் தேர்தல் அரசியல் களத்தில் 25 ஆண்டு காலம் தாக்குப்பிடித்திருக்கிறோம்; தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக களமாடுகிறோம்; சமூக ஊடகங்களில் திருமாவளவன் கேம் சேஞ்சர்.

திருமாவளவன் நினைத்தால் தமிழக அரசியலில் திசையை ஒரு சில நிமிடங்களில் திருப்பிப்போட்டுவிட முடியும்; மாற்றிவிட முடியும் என்றெல்லாம் கட்சி சார்பற்ற தோழர்கள் நமக்கு தொடர்பே இல்லாத ஜனநாயக சக்திகள் பேசுவதை கேட்டிருப்பீர்கள். ஆனாலும் கூட அப்படிப்பட்ட அரசியலை நாங்கள் செய்ய விரும்பாமல், ஒரு நாகரிகமான அரசியல் மரபை நாம் கடைப்பிடிக்கிறோம்.

விருப்பமனு

தொகுதி பங்கீடு உள்ளிட்ட நடவடிக்கைகளில் நாம் பெருந்தன்மையாக நடந்து கொள்கிறோம். இது தற்காலிகமாக வெற்றிகரமான அணுகுமுறை இல்லை என்று தோன்றினாலும் கூட காலத்திற்கும் போற்றக்கூடிய வெற்றிகரமான உத்தி என்பதை காலம் உணர்த்தும். எத்தனை தொகுதிகளை பெற்றாலும், அது நமது எதிர்காலத்துடன் தொடர்புடையது. இன்றைக்கு நம்பகத்தன்மையை இழந்து பெறும் வெற்றி விரைவில் நீர்த்து போகும்.

மக்கள் மத்தியில் உள்ள நம்பகத்தன்மையை பாதுகாப்பது தான் உண்மையான வெற்றி. வலதுசாரி மதவாத சக்திகள் இடமிருந்து பாதுகாப்பது தான் நமது முதன்மையான கடமை. நாம் குறைவான எண்ணிக்கைகள் பெற்று போட்டியிட்டாலும் கூட தமிழகம் முழுவதும் விருப்பமனு பெறுதல் என்பது ஜனநாயக கடமை. அதனை கடைப்பிடித்து வருகிறோம். எந்தெந்த தொகுதிகளில் இருந்து யார், யார் போட்டியிட விரும்புகிறவர்களை இதன் மூலம் அறிய முடியும்.

நன்மதிப்பு

ஏராளமான தொகுதி அல்லது 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக இருந்தால், விருப்பமனு பெற்று நேர்காணல் நடத்தி வேட்பாளர்களை தேர்வு செய்யலாம். நாம் திமுக கூட்டணியில் இருக்கிறோம், 23 கட்சிகள் அங்கம் வகிக்கிற கட்சியில் இருக்கிறோம், நாம் போட்டியிடக் கூடிய தொகுதிகளின் எண்ணிக்கை குறைவுதான் என்பது அனைவரும் அறிந்த உண்மை என்றாலும் கூட, இந்த தொகுதிகளை கேளுங்கள் என அம்மாவட்டப் பொறுப்பாளர்கள் கேட்பதாக விருப்பமனு அமையும்.

அரசியலை பாதுகாப்பதும், அந்த அரசியலை வழிநடத்துகின்ற விடுதலை சிறுத்தைகளின் வலிமையை தக்கவைப்பதும்தான் முதன்மையானது என்கிற அடிப்படையில்தான் நாம் பலதரப்பட்ட மக்களிடம் நன்மதிப்பை பெற்றிருக்கிறோம். அதனை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் அதுதான் அரசியல் வெற்றி. இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

Source link