சென்னை: மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி

சென்னை: மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

பாமகவில் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து உட்கட்சி பிரச்னை தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கு முடியும் வரை மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பில் தாக்கலான மனுவை, சென்னை உரிமையியல் நீதிமன்றம் கடந்த மார்ச் 26 ல் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து ராமதாஸ் சுப்ரீம் கோர்ட்டை நாட்டினார். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டை நாடும்படி ராமதாசுக்கு கோர்ட் உத்தரவிட்டது. சென்னை ஐகோர்ட்டிலும் ராமதாஸ் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கும்படி ராமதாஸ் தரப்பில் முறையிட்டனர். மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். பிறகு அவசர வழக்காக விசாரிக்கும்படி விடுத்த கோரிக்கையையும் ஏற்க சென்னை ஐகோர்ட் மறுத்துவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டதால், மனு செல்லதக்கது அல்ல என வாதிடப்பட்டது.

அன்புமணி தரப்பில், ” ராமதாஸ் தரப்பு வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம் ஒதுக்கப்பட்டு அவர்களும் ஏற்றுக் கொண்டு விட்டனர். தந்தைக்கு எதிராக செயல்படவில்லை,” என விளக்கம் அளித்தார்.

பாமகவின் வடிவேல் ராவணன் தரப்பில் அளித்த விளக்கத்தல்,” ராமதாஸ் பொதுக்குழுவை கூட்டாமல் தனக்கு தானே தலைவராக அறிவித்துக் கொண்டார்,” என தெரிவிக்கப்பட்டது.

ராமதாஸ் தரப்பில், ”ஏற்கனவே நிர்வாக குழு கூடி ராமதாஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தேர்தல் கமிஷனிடம் அளித்த மனு பரிசீலனை செய்யப்படாததால் தான் வழக்கு தொடரப்பட்டது,” எனக்கூறப்பட்டது.

இதன் பிறகு, மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸ் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Source link