சென்னை: மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் பேபியை சந்தித்த வைகோ, அது பற்றி

சென்னை: மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் பேபியை சந்தித்த வைகோ, அது பற்றி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். தேர்தல் கூட்டணி தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘நீங்கள் கேட்கிற எந்த கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டேன்’ என கூறினார்.

தி.மு.க., கூட்டணியில், மார்க்சிஸ்ட் கட்சி இரட்டை இலக்கத் தொகுதிகளை கேட்கிறது. ஆனால், தி.மு.க., தரப்பில், ஐந்து தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று கூறி விட்டனர். எனவே, கடந்த 2021 சட்டசபை தேர்தலைப் போல, ஆறு தொகுதிகளையாவது தருமாறு, மா.கம்யூ., வலியுறுத்தி வருகிறது.

இந்த சூழலில் இன்று மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்றார். அவர் மாநிலக்குழு கூட்டத்தை மேற்பார்வையிட வந்திருந்த கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் பேபியை சந்தித்து பேசினார்.

பிறகு வைகோ அளித்த பேட்டி: பேபி, என் நீண்ட கால நண்பர். ராஜ்யசபாவில், சக எம்.பி.,யாக மட்டுமல்ல, என் மீது எல்லையற்ற அன்பும், மரியாதையும் வைத்திருப்பவர். பார்லிமென்டில் இரு சபைகளிலும் நான் பேசிய பேச்சுகளை தொகுத்து எழுதிய புத்தகத்திற்கு அணிந்துரை பெற, கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினேன்.

அதற்காக, திருவனந்தபுரம் சென்ற என்னை, பாசத்துடன் உபசரித்தார். அந்த அடிப்படையில், அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். அவரிடம் என்ன பேசினேன் என்பதை வெளியே சொல்ல மாட்டேன். தொகுதி பங்கீடு பற்றி எதுவும் நான் பேசவில்லை. நீங்கள் கேட்கிற எந்த கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

Source link