சென்னை, மார்ச் 6- ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க., கூட்டணி சார்பில் சிவா, சுதீஷ் உள்ளிட்ட நான்கு பேரும், அ.தி.மு.க.,

சென்னை, மார்ச் 6- ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க., கூட்டணி சார்பில் சிவா, சுதீஷ் உள்ளிட்ட நான்கு பேரும், அ.தி.மு.க., கூட்டணியில் தம்பிதுரை, அன்புமணி ஆகிய இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. தமிழகத்திற்கான ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகள் காலியானதை தொடர்ந்து, வரும் 16ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இழுபறி

தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிகளில் தொகுதி பங்கீடு முடியாததால், ராஜ்யசபா வேட்பாளர்களை அறிவிப்பதில் இரு தரப்பிலும் இழுபறி நீடித்து வந்தது.

ஒருவழியாக நேற்று முன்தினம், தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு முடிவானது. தி.மு.க., கூட்டணி சார்பில், காங்கிரஸ் மற்றும் தே.மு.தி.க., கட்சிகளுக்கு தலா ஒரு ராஜ்யசபா பதவி ஒதுக்கப்பட்டது.

தி.மு.க., சார்பில் வேட்பாளர்களாக சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக், தே.மு.தி.க., சார்பில் சுதீஷ் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். அ.தி.மு.க., தரப்பில் தம்பிதுரையும், பா.ம.க., தரப்பில் அன்பு மணியும் வேட்பாளர் களாக நிறுத்தப்பட்டனர்.

அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் சீனிவாசன், வேலுமணி உள்ளிட்ட 10 எம்.எல்.ஏ.,க்கள் முன்மொழிந்த வேட்பு மனுவை, சட்டசபை கூடுதல் செயலரும், ராஜ்யசபா தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சாந்தியிடம், தம்பிதுரை வழங்கினார்.

அதை தொடர்ந்து, பழனிசாமி உள்ளிட்டோர் சட்டசபை வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அறைக்கு சென்று விட்டனர்.

இதன்பின், பா.ம.க., தலைவர் அன்புமணி, அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் முனுசாமி, விஸ்வநாதன், தங்கமணி உள்ளிட்டோருடன் வந்து மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, பழனிசாமி அறைக்கு சென்ற அன்புமணி, அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில், காங்கிரஸ் நிர்வாகிகள் கிரீஷ் ஷோடங்கர், செல்வப்பெருந்தகை, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் முன்னிலையில் சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கிறிஸ்டோபர் திலக், சுதீஷ் ஆகியோர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

சுயேச்சை

எம்.எல்.ஏ.,க்களின் பரிந்துரை கடிதம் இல்லாமல், பா.ம.க., நிறுவனர் ராமதாசின் தனி செயலர் சுவாமிநாதன் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தார். இவர் உட்பட ஆறு சுயேச்சைகள், உரிய பரிந்துரை கடிதம் இல்லாமல் மனு தாக்கல் செய்து உள்ளனர்.

மனுக்களை திரும்ப பெற, வரும் 9ம் தேதி கடைசி நாள். உரிய தேர்தல் விதிகளை பின்பற்றாமல், மனு தாக்கல் செய்துள்ள ஆறு சுயேச்சைகளின் மனுக்கள் நிராகரிக்கப்பட உள்ளன.

இதையடுத்து, தி.மு.க., கூட்டணியில் நான்கு பேர், அ.தி.மு.க., கூட்டணியில் இரண்டு பேர் என ஆறு பேர், ராஜ்யசபா எம்.பி.,க்களாக வரும் 9ல் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.

@Image@ராமதாஸ் உதவியாளர் சுவாமிநாதன் மனு தாக்கல்

ராஜ்யசபா தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய, கடைசி நாளான நேற்று பிற்பகல் 3:00 மணி வரை அவகாசம் இருந்த நிலையில், 2:59 மணிக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாசின் உதவியாளர் சுவாமிநாதன் திடீரென வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இது தொடர்பாக சுவாமிநாதனிடம் கேட்டபோது, ”ராஜ்யசபா தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ பா.ம.க., வேட்பாளராக, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் என்னை அறிவித்துள்ளார். அதை தொடர்ந்து, நேற்று பிற்பகல் 2:59 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன்,” என்றார்.

ராஜ்யசபா தேர்தலில் ஒருவரது வேட்பு மனு ஏற்கப்பட வேண்டுமானால், 10 எம்.எல்.ஏ.,க்கள் முன்மொழிய வேண்டும். ஆனால், ராமதாஸ் தரப்புக்கு ஜி.கே.மணி, அருள் ஆகிய இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே உள்ளனர்.

இது பற்றி சுவாமிநாதனிடம் கேட்டபோது, ”தேர்தல் கமிஷனின் முழு வழிகாட்டுதலையும் பின்பற்றி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன்,” என்றார்.

ராஜ்யசபா தேர்தலில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனுக்கள், இன்று காலை 11:00 மணிக்கு பரிசீலனை செய்யப்பட உள்ளன.

சுவாமிநாதனின் வேட்பு மனுவை, 10 எம்.எல்.ஏ.,க்கள் முன் மொழியவில்லை எனில் அவரின் மனு தள்ளுபடி செய்யப்படும்.

Source link