சென்னை: முதல்வர் பதவி வகிக்கிறோம் என்ற எண்ணம்கூட இல்லாமல், வாயைத் திறந்தால் பொய் சொல்வதையே ஸ்டாலின்

சென்னை: முதல்வர் பதவி வகிக்கிறோம் என்ற எண்ணம்கூட இல்லாமல், வாயைத் திறந்தால் பொய் சொல்வதையே ஸ்டாலின் வாடிக்கையாக கொண்டு இருக்கிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கை;

சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க, பயத்தில் பிதற்றிக் கொண்டிருக்கும் முதல்வர், இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற ஒரு விழாவில், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை திமுக அழுத்தத்தால் கொண்டு வந்தது போன்ற ஒரு மிகப் பெரிய பொய்யை கட்டமைக்க முயற்ச்சிக்கிறார்.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றுவதற்காக, அரசியலமைப்புச் சட்ட ஷரத்தில் உள்ள உரிமையை பயன்படுத்தி, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை நிறைவேற்றி அரசாணை வெளியிட்டேன்.

சத்துணவு திட்டம் என்றால் எம்ஜிஆர், தொட்டில் குழந்தை திட்டம் என்றால் ஜெயலலிதா, ‘7.5 சதவீத உள் இடஒதுக்கீடு என்றால் எனது தலைமையிலான அரசு என்று அனைவரும் அறிந்திருக்கையில் இந்தத் திட்டத்தையே தான்தான் புதிதாகக் கொண்டு வந்தது போல் தம்பட்டம் அடித்து வருவது வெட்கக்கேடானது.

2021 முதல் நான்கரை ஆண்டு காலமாக தூங்கிவிட்டு, 5 லட்சம் கோடி கடன் வாங்கி, இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்கிவிட்டு, ஆட்சி முடியும் தருவாயில் கடந்த 3 மாதங்களாக பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலேயே, அடிக்கல் நாட்டுவது; ஒப்பந்தம் கோருவது; மக்களின் வரிப் பணத்தில் விளம்பரம் தேடுவது போன்றவைகளால், தமிழக மக்களை ஏமாற்றலாம் என்று ஸ்டாலின் மனப்பால் குடிக்கிறார்.

தான் ஒரு முதல்வர் பதவி வகிக்கிறோம் என்ற எண்ணம்கூட இல்லாமல், வாயைத் திறந்தால் பொய் சொல்வதையே வாடிக்கையாகக் கொண்டு செயல்படும் ஸ்டாலின் பேச்சு இனி தமிழக மக்களிடம் எடுபடாது. பொய்யாலும், விளம்பரத்தாலும் உயர்ந்தவன் வாழ்க்கை நிலைக்காது என்பதை ஸ்டாலின் உணரும் காலம் விரைவில் வர உள்ளது. இனியாவது இதுபோன்ற பொய்யை கட்டமைப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு இபிஎஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Source link