சென்னை: முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும்

சென்னை: முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

முதல்வர் ஸ்டாலின் நேற்று தன் 73வது பிறந்த நாளையொட்டி, முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி நினைவிடங்கள், ஈ.வெ.ராமசாமி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை கோபாலபுரத்தில் தன் தாய் தயாளுவிடம் ஆசி பெற்றார். குடும்பத்தினர் மற்றும் பள்ளி குழந்தைகளுடன், முதல்வர் ஸ்டாலின் ‘கேக்’ வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, கவர்னர் ரவி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், நடிகர் ரஜினி மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, காலையிலேயே ஸ்டாலினுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டதோடு, போனிலும் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.

தி.மு.க., தலைமையகமான அறிவாலயத்தில் ஸ்டாலினுக்கு, அமைச்சர்கள், தி.மு.க., மாவட்டச் செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

வாழ்த்து தெரிவிக்க வந்தவர்களுக்கு, துண்டு, தொப்பி, அரசின் சாதனைகள் அடங்கிய புத்தகம், பேட்ஜ் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

கால்கள் பாதை மாறக்கூடாது

தமிழும் தமிழகமும் தலைநிமிர்ந்த வரலாற்றில், நான் சிறு தொண்டனாய் இருந்தாலும், கிடைக்கின்ற வாய்ப்புகளில் எல்லாம் பெருந்தொண்டாற்றிடவே நினைக்கிறேன். அந்த உறுதியோடு தான், தமிழகத்தை முதன்மை மாநிலமாக்கி, முன்னேற்றப் பாதையில் நடை போட்டுக் கொண்டிருக்கிறோம். தி.மு.க., ஆட்சியின் திட்டங்களும் சாதனைகளும், கோடிக்கணக்கான தமிழக மக்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும், இல்லத்திலும் போய் சேர்ந்துள்ளது. தனிக்குணம் கொண்ட தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ்கின்றனர்; நாட்டிற்கே புத்தொளி வழங்குகின்றனர் என புகழும் வகையில் தமிழகம் உயர்ந்து நிற்கிறது. தமிழினத்தின் லட்சியப் பயணத்தில், நம் கால்கள் பாதை மாறக்கூடாது. நம் தலை, யாரிடமும் எதற்காகவும் தாழக்கூடாது. சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அறிவுத்திறத்தால், நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடித்திட வேண்டும். இதுவே, என் பிறந்த நாள் உறுதிமொழி. – ஸ்டாலின், தமிழக முதல்வர்

ராகுல் வாழ்த்தில் சகோதரர் தவிர்ப்பு

கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு ராகுல் அனுப்பிய வாழ்த்து செய்தியில், ‘அன்பு சகோதரர்’ என குறிப்பிட்டிருந்தார். இந்த ஆண்டு பிறந்த நாள் வாழ்த்து செய்தியில், ‘சகோதரர்’ என்ற வார்த்தையை முற்றிலுமாக ராகுல் தவிர்த்துள்ளார். மேலும், நேற்று மதியத்திற்கு மேல் தான், வாழ்த்து பதிவை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதேபோல, ராகுலுக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின், தன் அறிக்கையில் ‘சகோதரர்’ என குறிப்பிடவில்லை. ஆனால், உ.பி., முன்னாள் முதல்வர் அகிலேஷ், ம.நீ.ம., தலைவர் கமல், பா.ம.க., தலைவர் அன்பு மணி, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோரின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின், ‘சகோதரர்’ என்ற வார்த்தையை குறிப்பிட்டுள்ளார். இது, தி.மு.க., மற்றும் காங்கிரசாரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தி.மு.க.,விடம் ‘சீட்’ எதிர்பார்க்கும் சத்யா

ம.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து, திராவிட வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை துவக்கியுள்ள மல்லை சத்யா தலைமையில், அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம், சென்னை எழும்பூரில் நடந்தது. அதில், ‘தி.மு.க., கூட்டணியை ஆதரிப்பது, திராவிட வெற்றிக் கழகத்துக்கு, தேர்தலில் போட்டியிட, தி.மு.க., ‘சீட்’ வழங்க வேண்டும்’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலினிடம், நேற்று சென்னை அறிவாலயத்தில் மல்லை சத்யா வழங்கினார். அதை பெற்றுக் கொண்ட முதல்வர், ‘நீங்கள் தீர்மானம் தந்து தான் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உங்களை எல்லாம் நான் அரவணைத்து கொள்கிறேன்’ என்றார்.

Source link