புதுடில்லி: பிரிமியர் கிரிக்கெட் தொடருக்கான 2ம் கட்ட அட்டவணை வெளியானது. வரும் மே 2ல் சென்னையில் நடக்கும் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன.
பிரிமியர் கிரிக்கெட் 19வது சீசன் நாளை துவங்குகிறது. பைனல், மே 31ல் நடக்கவுள்ளது. ‘நடப்பு சாம்பியன்’ பெங்களூரு, சென்னை, மும்பை உள்ளிட்ட 10 அணிகள், 84 போட்டிகளில் விளையாடுகின்றன. சமீபத்தில், முதல் 20 லீக் போட்டிகளுக்கான (மார்ச் 28-ஏப். 12) முதற்கட்ட அட்டவணை வெளியானது.
இந்நிலையில் அடுத்த 50 லீக் போட்டிகளுக்கான (ஏப். 13-மே 24) இரண்டாம் கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. இதன்படி, 8 நாட்கள் (ஏப். 18, 19, 25, 26, மே 3, 10, 17, 24), தலா 2 போட்டிகள் நடத்தப்படுகிறது. ராய்பூர், தர்மசாலா உட்பட 12 இடங்களில் போட்டிகள் நடக்கவுள்ளன.
ஏப். 13ல் ஐதராபாத்தில் நடக்கவுள்ள போட்டியில் ஐதராபாத், ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஏப். 14ல் சென்னையில் நடக்கவுள்ள லீக் போட்டியில் சென்னை, கொல்கட்டா அணிகள் விளையாடுகின்றன. அதன்பின் மே 2ல் சென்னையில் நடக்கும் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மே 24ல் கொல்கட்டாவில் நடக்கும் கடைசி லீக் போட்டியில் கொல்கட்டா, டில்லி அணிகள் மோதுகின்றன.
‘பிளே-ஆப்’ சுற்றுக்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.
