சென்னை: மேல்முறையீடு விசாரணை என்ற பெயரில், கோவில் நிலங்கள் மொத்தமாக அபகரிக்கப்பட இருந்த நிலையில், உயர் நீதிமன்றம் தலையிட்டதால், அரசாணையை வருவாய் துறை திரும்ப பெற்றுள்ளது.
தமிழகத்தில் கோவில்கள், மடங்கள் போன்ற அமைப்புகளுக்கு, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தானமாக கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலங்களை, கோவில்களுக்கு கொடுத்தவர்கள், அதற்கான ஆவணங்களை முறையாக எழுதி கொடுத்துள்ளனர்.
மேல் முறையீடு
இதில் பெரும்பாலான நிலங்கள், தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த நிலங்களை மீட்க, ஹிந்து சமய அறநிலையத் துறை சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், நீண்ட காலமாக கோவில் பெயரில் உள்ள நிலங்களை சிலர், பட்டா விபரங்களை குறிப்பிட்டு உரிமை கொண்டாடுகின்றனர்.
இதை அடிப்படையாக வைத்து பலரும், வருவாய் துறையில் மேல்முறையீடு செய்கின்றனர். இந்த மேல்முறையீடுகளை விசாரித்து, தவறான ஆதாரங்கள் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட்டால், கோவில் நிலங்கள் தனியார் கைக்கு மாற வாய்ப்புள்ளது.
இவ்வாறான மேல்முறையீடுகளை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு, 2025 செப்., 9ல் அரசாணை வெளியிடப்பட்டது.
அதன் விபரம்:
ரயத்துவாரி பட்டா நிலங்கள் தொடர்பாக, தமிழக மைனர் இனாம் சட்டப்படியான மேல்முறையீடு பிரச்னையை தீர்க்க, உயர்நிலை குழு அமைக்கப்படுகிறது.
தலைமை செயலர் தலைமையிலான இந்த உயர்நிலை குழுவில், வருவாய் துறை செயலர் உட்பட ஆறு பேர் உறுப்பினர்களாக இருப்பர்.
மேல்முறையீடுகள் அடிப்படையில், எந்தெந்த நிலங்களை பத்திரப்பதிவு செய்ய தடை விதிப்பது, தடையை விடுவிப்பது என்பதை, இக்குழு முடிவு செய்யும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களுக்கு, பதிவுத்துறை இணையதளத்தில் வழிகாட்டி மதிப்பு பூஜ்ஜியமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உயர்நிலைக் குழு
மேலும், வருவாய் துறை தகவல் தொகுப்பில், இந்த சர்வே எண்கள், ‘டி’ என்ற ஆங்கில எழுத்துடன் அடையாளப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலங்களை, பத்திரப்பதிவு தடையில் இருந்து விடுவிக்க, உயர் நிலை குழு, தவறான தகவல்கள் அடிப்படையில் முடிவு எடுத்தால், கோவில் நிலங்கள் அதிகாரிகள் துணையுடன் தனியாரால் அபகரிக்கப்படும் நிலை ஏற்படும்.
இந்த பின்னணியில் தான், வருவாய் துறையின் உயர்நிலை குழு அமைக்கும் அரசாணைக்கு எதிர்ப்பு எழுந்தது. இது தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதில், அரசாணையால் ஏற்படும் மோசமான விளைவுகள், வெளிப்படையாக எடுத்து கூறப்பட்ட நிலையில், வருவாய் துறை, அந்த அரசாணையை ரத்து செய்வதாக தெரிவித்தது.
உயர் நீதிமன்றம் தலையிட்டு, இந்த வழக்கை விசாரித்ததால் தான், கோவில் நிலங்களை அபகரிக்க நடந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என, சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
பட்டா பிரச்னை அடிப்படையில் மேல்முறையீடுகளை விசாரிக்க, ஏற்கனவே தேவையான அமைப்புகள் இருக்கையில், வருவாய் துறை இப்படி ஒரு உயர் நிலைக் குழுவை அமைக்க முயற்சித்தது ஏன் என்றும், அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
