சென்னை: சென்னை வடபழனி முருகன் கோவிலில் போலீசார் யாரும் பக்தர்கள் வரிசையில் சென்று தரிசனம் செய்வதில்லை. இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை வடபழனி முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். நீண்ட நேரம் வரிசையில் நின்று பக்தர்கள் முருகனை தரிசித்து செல்கின்றனர். இந்த சூழலில், போலீசார் யாரும் பக்தர்கள் வரிசையில் சென்று தரிசனம் செய்வதில்லை. தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி, நேரடியாக கோவிலுக்குள் சென்று விடுகின்றனர்.
அவர்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு வேண்டியவர்களையும் வரிசையில் நிற்காமலேயே தரிசனத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். சிறப்பு தரிசனத்துக்கு கட்டணமும் செலுத்துவதில்லை. தங்களுக்கு வேண்டியவர்கள், அரசு அதிகாரிகள் விஐபிகளையும் அழைத்துச் செல்கின்றனர்.
போலீசாரின் இத்தகைய செயல், வரிசையில் நின்று தரிசிக்கும் பக்தர்களை பெரும் சிரமத்துக்கு ஆளாக்குகிறது. முருகனுக்கு உரிய இந்த பணத்தை செலுத்தாமல் போவதால் அவர்கள் கடன் பட்டவர்களாக ஆவார்கள். போலீசாரின் இத்தகைய அத்துமீறலுக்கு தமிழக போலீஸ் டிஜிபி முடிவு கட்ட வேண்டும். அத்துமீறும் போலீசார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
என்ன தீர்வு?
கோவில்களில் நீண்ட நேரம் கால் கிடைக்க காத்திருக்கும் பக்தர்கள் மனம் நோகாத வண்ணம், விஐபி தரிசனத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். வேண்டுமானால் விஐபிகளுக்கு என்று தனியாக குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி விடலாம்.
போலீசார் இப்படி அழைத்து வருபவர்கள் பலர், விஐபிகள் தானா, அரசு அதிகாரிகளா என்று யாருக்கும் தெரியாது. போலீஸ் அதிகாரத்தை பயன்படுத்தி, தங்களுக்கு வேண்டியவர்கள், அரசியல்வாதிகளின் குடும்பத்தினர் என்று பலரையும் கோவிலுக்குள் அழைத்துச் செல்கின்றனர்.
இதனால், கோவில் நிர்வாகத்துக்கும், அரசுக்கும், அறநிலையத்துறைக்கும் தான் கெட்ட பெயர் ஏற்படுகிறது. இந்த அவப்பெயரை தவிர்க்க, கோவில்களில் போலீஸ் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டியது அவசியம்.
