சென்னை: ” விஜய் கனவில் வாழ்ந்து வருகிறார். கடந்த காலங்களில் சினிமா நட்சத்திரங்களை மக்கள் நிராகரித்து உள்ளனர்,” என மத்திய அமைச்சரும், தமிழக பாஜ மேலிட பொறுப்பாளருமான பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அக்கட்சி இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. வேட்பாளர் தேர்வு குறித்து முடிவு செய்ய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்தார்.
ஒரே குடும்பமாக
விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஊழல் திமுக அரசை வீழ்த்தவும், தோற்கடிக்கவும் வலிமையான தேஜ கூட்டணி பிரசாரத்தை துவக்கிவிட்டது. ஊழல், மோசமான சட்டம் ஒழுங்கு, மீனவர், விவசாயிகள், பெண்கள் ஏமாற்றப்பட்டதற்கு திமுக காங்கிரஸ் கூட்டணி தான் பொறுப்பு.
தமிழகத்திற்கு ஜெயலலிதா வழங்கிய சிறந்த நிர்வாகத்தை தமிழக மக்கள் மீண்டும் விரும்புகின்றனர். இந்த தேர்தலானது, தமிழகத்தின் தலைவிதியையும், மக்களின் எதிர்காலத்தையும் இந்த தேர்தல் தீர்மானிக்கும். இபிஎஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று, சிறந்த நிர்வாகத்தை வழங்கும். விவசாயிகள், பெண்கள், மீனவர்கள் மற்றும் சிறுதொழில் செய்வோருக்கு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படும்.ஜெயலலிதாவின் சிறப்பாக விளங்கியதை மீண்டும் உறுதி செய்ய நாங்கள் ஒரே குடும்பமாக பணியாற்றி வருகிறோம்.
சிறந்த நிர்வாகம்
தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அந்த மாற்றத்தை தேசிய ஜனநாயக கூட்டணி வழங்கும். இன்று தமிழக பாஜ வேட்பாளர் பட்டியல் குறித்து ஆலோசிக்க உள்ளேன். ஓரிரு நாளில் முடிவு செய்து அறிவிப்போம்.
திமுக காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கியது.அதற்கு திமுக தான் கவலைப்பட வேண்டும். இரண்டு ஊழல் கட்சிகள் ஒன்று சேர்ந்து வருவதை மக்கள் விரும்பவில்லை. மத்தியில் மோடி மற்றும் மாநிலத்தில் இபிஎஸ் ஆட்சி நடப்பதை மக்கள் விரும்புகின்றனர். இரட்டை இன்ஜின் அரசு, இரு மடங்கு நலத்திட்டங்களையும், சிறந்த நிர்வாகத்தையும் வழங்கும்.
கனவுலகில்
தமிழக மக்கள், கலாசாரம், அரசியலை விஜய் புரிந்து கொள்ளவில்லை. கடந்த காலங்களிலும் சினிமா நட்சத்திரங்கள் வந்துள்ளனர். ஆனால், மக்கள் அவர்களை நிராகரித்துவிட்டனர். எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள். பல ஆண்டுகள் மக்களுக்கு சேவை செய்த பிறகு முதல்வர் ஆனார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
