சென்னை: விரைவு ரயில்களில் பயணிக்க, 60 நாட்களுக்கு முன்பே, முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. ‘தத்கால்’ டிக்கெட் பெற, ஒரு நாளுக்கு முன் முன்பதிவு செய்யலாம். பெரும்பாலும் டிக்கெட் பதிவு துவங்கிய, சில நிமிடங்களிலேயே விற்பனையாகி விடுகிறது.
உறுதி செய்யப்பட்ட ‘டிக்கெட்’ முடிந்த பின், ஆர்.ஏ.சி., ஒதுக்கீடு செய்யப்படும். ஆர்.ஏ.சி., டிக்கெட் என்பது, இரண்டு பேருக்கு ஒரு ‘பர்த்’ ஒதுக்கப்படும். இருவருக்கு பகுதி அளவு இருக்கை என்பதால், அமர்ந்தபடி பயணிக்கலாம். படுத்து துாங்க முடியாது.
ஏற்கனவே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர், அதை ரத்து செய்யும் போது, ஆர்.ஏ.சி.,யில் உள்ளவருக்கு, அந்த இருக்கை கிடைக்கும்.
காத்திருப்பு பட்டியலில் இருப்பவருக்கு, ‘ஆர்.ஏ.சி., டிக்கெட்’ வழங்கப்படும். இந்நிலையில், ஆர்.ஏ.சி. டிக்கெட்டுகளுக்கு, பாதி கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதை பார்லிமென்ட் குழுவும் பரிந்துரை செய்து உள்ளது.
இது குறித்து, பார்லிமென்ட் பொதுகணக்கு குழு வெளியிட்டுள்ள அறிக்கை:
பயணியர் ரயிலில், ஆர்.ஏ.சி., பயணி யரிடம் முழு கட்டணம் வசூலிக்கக் கூடாது. படுக்கை வசதி வழங்காமல், முழு கட்டணம் வசூலிப்பது முறையற்றது. பயணியர் பட்டியலை தயார் செய்தபின், ஆர்.ஏ.சி., பயணியருக்கு, முழு கட்டணத்தில், ஒரு பகுதியை திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
