சென்னை: விவாகரத்து வழக்கு முடியும் வரை, சென்னை நீலாங்கரை இல்லத்தில் தங்க அனுமதி கோரி, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில், நடிகர் விஜய் மனைவி சங்கீதா புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.
நடிகர் விஜய்க்கும், தனக்கும் 1999ம் ஆண்டு நடந்த திருமணத்தை ரத்து செய்யக் கோரி, செங்கல்பட்டு நீதிமன்றத்தில், அவரது மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்நிலையில், இந்த வழக்கு முடியும் வரை, சென்னை, நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க உத்தரவிட கோரி, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சங்கீதா, இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார்.
மனுவில், அவர் கூறியுள்ளதாவது:
* பிரிட்டன் நாட்டு குடியுரிமை பெற்ற எனக்கு, வசிப்பதற்கு வீடு இல்லாத காரணத்தால், நீலாங்கரை இல்லத்தில் வசிக்க அனுமதிக்க வேண்டும்.
* விவாகரத்து தொடர்பாக நீதிமன்றத்தை அணுகினால், நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க முடியாது என, வழக்கறிஞர்கள் வாயிலாக, விஜய் மிரட்டல் விடுத்துள்ளார்.
* விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்து உள்ளதால், விஜய் வீட்டில் வசிக்க அனுமதி வழங்க மாட்டார். எனவே, இந்த இடைக்கால உத்தரவை வழங்குவதால், விஜய்க்கு எந்த பாதிப்பும் இல்லை.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
