சென்னை : வீட்டுக்கு ஒரு 'பிரிஜ்' சாதனம், அனைத்து குடும்பங்களுக்கும் 10,000 ரூபாய் உதவித்தொகை, தெரு நாய்களை

சென்னை : வீட்டுக்கு ஒரு ‘பிரிஜ்’ சாதனம், அனைத்து குடும்பங்களுக்கும் 10,000 ரூபாய் உதவித்தொகை, தெரு நாய்களை தடுக்க சிறப்பு திட்டம் உட்பட, 297 வாக்குறுதிகள் இடம்பெற்ற தேர்தல் அறிக்கையை அ.தி.மு.க., நேற்று வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்காக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, ஏற்கனவே மூன்று கட்டமாக தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். அவற்றை எல்லாம் தொகுத்து, புதிய அறிவிப்புகளுடன் கூடிய தேர்தல் அறிக்கையை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் பழனிசாமி வெளியிட்டார்.

பின்னர், பழனிசாமி அளித்த பேட்டி:

ஜெயலலிதா மறைவுக்கு பின், தொண்டர் களின் ஆதரவோடு சிறப்பாக ஆட்சிஆனால், தீயசக்தி தி.மு.க., மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது. நான்கில் ஒரு பங்கு வாக்குறுதிகளை கூட அவர்கள் நிறைவேற்றவில்லை. தி.மு.க., ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகி விட்டனர்.


இலவச பிரிஜ்

அ.தி.மு.க., சார்பில் அமைக்கப்பட்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து, பல்வேறு தரப்பு மக்களின் கருத்துகளை கேட்டு, மதச்சார்பின்மை, மனிதநேயம், ஏழை எளியோர் மேம்பாடு, சமூக நீதி, சமத்துவம், சிறுபான்மையினர் பாதுகாப்பு போன்றவற்றை அடிப்படையாக வைத்து, சிறப்பான அறிக்கையை தயாரித்துள்ளது.

ஏற்கனவே மூன்று கட்டமாக தேர்தல் அறிக்கை வெளியிட்டோம். அதில், குடும்பத்துக்கு 10,000 ரூபாய், அனைத்து மகளிருக்கும் மாதம் 2,000 ரூபாய், ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம், அனைவருக்கும் தரமான வீடு, 5 லட்சம் பெண்கள் ஸ்கூட்டர் வாங்க, தலா 25,000 ரூபாய் மானியம், கல்விக்கடன் தள்ளுபடி, மூன்று காஸ் சிலிண்டர் இலவசம் என, பல வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டன.

தொடர்ந்து, இல்லத்தரசிகளின் பணிச்சுமை குறைக்க, ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச பிரிஜ் வழங்கப்படும். அதேபோல், ரேஷன் கடைகளில், தலா ஒரு கிலோ பருப்பு, பாமாயில் இலவசமாக வழங்கப்படும்.

பொது நிர்வாகம், விவசாயம், நீர்வளம், பெண்கள் பாதுகாப்பு என 31 பிரிவுகளில், 297 வாக்குறுதிகளை அ.தி.மு.க., வழங்குகிறது.

கொரோனா காலகட்டத்தில், அரசுக்கு ஒரு ரூபாய் வருமானம் இல்லாத நிலையிலும், மக்களை பாதிக்காமல் ஆட்சி செய்தோம். நிதி ஆதாரங்களை பெருக்கி வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.

அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை தான் கதாநாயகனாக உள்ளது. மக்களுக்கு எது நல்லது என பார்த்து பார்த்து அறிக்கை தயாரித்துள்ளோம். அறிவித்த வாக்குறுதிகளை கட்டாயம் நிறைவேற்றுவோம்.


7.5 சதவீத இடஒதுக்கீடு

அரசு பள்ளியில் பயிலும் ஏழை, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளின் கனவை நினைவாக்க, மருத்துவ கல்வியில் 7.5 சதவீத இடஒதுக்கீடு அ.தி.மு.க., ஆட்சியில் வழங்கப்பட்டது.

இதுவரை, 3,000 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவர்களாகி உள்ளனர். இது, மிகப்பெரிய பாக்கியம். இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே தான், 2.5 சதவீதம் உயர்த்தி, 10 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளேன்.

மதுக்கடைகளை படிப்படியாக தான் குறைக்க முடியும்; அதை தான் வாக்குறுதியாக கொடுத்துள்ளோம்.

எல்லா மக்களும் பணக்காரர்கள் இல்லை. மக்களுக்கு தேவையானதை வழங்கி, மகிழ்ச்சியான வாழ்க்கை கொடுப்பது அரசின் கடமை. அதை செய்யும் விதமாகவே இலவசங்களை அறிவித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

‘எங்கள் கூட்டணியில் புதிய தமிழகம் இல்லை’

த.மா.கா., தலைவர் வாசன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோருடன் பேச்சு நடக்கிறது. தொகுதி பங்கீடு இறுதி கட்டத்துக்கு வந்து விட்டது. இன்னும் ஓரிரு நாளில் தொகுதிகள் பட்டியல் வெளியிடப்படும். இனி, புதிய கட்சிகள் வர வாய்ப்பு இல்லை. புதிய தமிழகம் கட்சியுடன் கூட்டணியை இறுதி செய்ய முடியவில்லை. அவர் கேட்பதும் நாங்கள் சொல்வதும் சரிப்பட்டு வரவில்லை. அ.தி.மு.க., அலுவலகத்தில் இருந்து, மயிலாப்பூர் தொகுதி தான் பக்கமாக உள்ளது. அதனால், அங்கிருந்து பிரசாரத்தை துவக்குகிறேன். தி.மு.க., ஆட்சியில், செய்தியாளர்கள் தாக்கப்படுவது வாடிக்கையாக நடக்கிறது.
சசிகலா, ராமதாஸ் அமைத்திருக்கும் கூட்டணியால், எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தி.மு.க., கூட்டணியில் வி.சி., தலைவர் திருமாவளவனும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் வேதனையில் இருக்கின்றனர். ஆனால், நாங்கள் உணர்வுபூர்வமாக கூட்டணியில் உள்ளோம். கடந்த முறையை விட, நாங்கள் குறைவான இடங்களில் போட்டியிடுவது பின்னடைவு இல்லை. சூழ்நிலைக்கு ஏற்றவாறு தான் போட்டியிட முடியும். இதில் அதிகம், குறைவு என்ற பேச்சு இல்லை. தி.மு.க.,வே குறைவான இடங்களில் தான் போட்டியிடுகிறது. தேர்தல் களத்தில் நாங்கள் தான் வேகமாக செயல்படுகிறோம்.
– பழனிசாமி, பொதுச்செயலர், அ.தி.மு.க.,

Source link