சென்னை: 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவிற்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. மக்களிடம் மகிழ்ச்சியை காண்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவிற்கு இன்னும் பத்து நாட்களே உள்ளன. செல்லும் இடம் எங்கும் கட்சியினரிடம் எழுச்சியைக் காண்கிறேன். தமிழக மக்களிடம் மகிழ்ச்சியைக் காண்கிறேன். 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்கள் ஒவ்வொன்றும் மக்களுக்குத் தந்திருக்கக் கூடிய பயனும், தொடரவிருக்கும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் நாம் நிறைவேற்றவிருக்கும் சாதனைத் திட்டங்களின் மீதான மக்களின் எதிர்பார்ப்பும் அனைத்து தொகுதிகளிலும் வெளிப்படுகிறது. தேர்தல் களத்தில் திமுக தொண்டர்களின் பணி என்பது எதிரிகளாலும் வியந்து பார்க்கக் கூடியது என்பதே நம் வரலாறு. கடந்த ஓராண்டுக்கு மேலாக கட்சியினர் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து வந்திருக்கிறார்கள்.
மீண்டும் ஆட்சி
மக்களுடனான நம் உறவு எப்போதும் தொடர வேண்டும். குறிப்பாக இனிவரும் 10 நாட்களும் மக்களோடு மக்களாக உடன்பிறப்புகள் களப்பணி ஆற்ற வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் வீடு வீடாக சென்று துண்டறிக்கைகளை வழங்கி வாக்குகளைச் சேகரிப்பதில் முழுமையான கவனம் செலுத்துவதுடன், கூட்டணிக் கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளிலும் உங்களில் ஒருவனான நானே நிற்கிறேன் என்ற எண்ணத்துடன் களப்பணியாற்றி வெற்றியை உறுதி செய்ய வேண்டும். கட்சியினர் உங்களின் உழைப்பின் மீது உள்ள நம்பிக்கையில் உறுதியுடன் சொல்கிறேன், இந்த தேர்தல் களத்தில் நாம்தான் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம். இதை மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.
நம்பிக்கை
குறிப்பாகத் தமிழக பெண்கள் முகத்தில் வெளிப்படும் மலர்ச்சியும், இளைஞர்களின் மனதில் உள்ள நம்பிக்கையும், சிறுபான்மைச் சமுதாயத்தினர் உள்ளிட்ட அனைத்து மக்களின் ஆதரவும் நமது வெற்றிக்கு அடித்தளமாக உள்ளன. வாக்குப்பதிவு நாளில் அதை வெற்றியாகக் கட்டி எழுப்ப வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ஒவ்வொரு ஓட்டும் மிகவும் முக்கியம். ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்பதை உறுதி செய்யும் உழைப்பை கட்சியினர் வழங்கினால் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றிதான். அதைத்தான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன். ஒற்றுமையாகவும் ஒருங்கிணைப்புடனும் கட்சியினர் ஓயாது உழைக்கிறார்கள் என்ற செய்தி என் காதுக்கு வரும்போது எல்லாம் நான் உற்சாகத்துடன் உங்களை மிஞ்சும் உழைப்பை வழங்கும் ஆற்றலைப் பெறுகிறேன்.
2.0 ஆட்சி
கொளுத்தும் வெயிலையும், கோடை மழையையும் பொருட்படுத்தாமல் களத்தில் பணியாற்றுகின்ற கட்சியினருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சலிக்காமல் உழைப்பதில் நம் கட்சியினருக்கு நிகர் யாருமில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கின்ற உங்கள் உழைப்பினால், தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து நீங்கள் ஒற்றுமையாக ஆற்றுகின்ற பணியினால், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றியை உறுதி செய்து, இந்தியாவுக்கே வழிகாட்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சியை திமுகவினர் அமைத்துக் காட்டினார்கள் என்ற பெருமையை விட உங்களில் ஒருவனான எனக்கு வேறென்ன வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
