சென்னை: 28 தொகுதிகளில் 23 தொகுதிகளை அடையாளம் கண்டிருக்கிறோம், ஓரிரு நாட்களில் முழு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறி உள்ளார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி;
கடந்த தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளில் 16 தொகுதிகளை மீண்டும் நாங்கள் திரும்ப பெற்றிருக்கிறோம். தோழமை கட்சிகள் கேட்டுக் கொண்டதால், கூட்டணிக் கட்சிகள் சிலரை நிறுத்துவதால் 2 தொகுதிகளை அவர்களால் கொடுக்க இயலவில்லை. அதற்கான காரணங்களை நாங்கள் ஒப்புக் கொண்டு இருக்கிறோம்.
ஈரோடு கிழக்கு ஏற்கனவே நாங்கள் நின்ற தொகுதி. அதை மீண்டும் பெற்றிருக்கிறோம். 28 தொகுதிகளில் 23 தொகுதிகளை அடையாளம் கண்டிருக்கிறோம். 5 தொகுதிகள் தொடர்பாக நாங்கள் மீண்டும் பேசுவோம். குறிப்பாக கன்னியாகுமரியில் நாங்கள் 3 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். அதில் ஒன்றை கேட்கிறார்கள், அகில இந்திய தலைமையிடம் பேசியிருக்கிறார்கள். காரணம், அது எங்களின் சிட்டிங் தொகுதி. எனவே அதை கொடுப்பது கடினம்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எங்கள் வேட்பாளருக்கு பிரச்னை இருக்கிறது. அதை முதல்வரிடம் பேசி ஸ்ரீவைகுண்டம் தொகுதி பிரச்னையை தீர்ப்போம். தென்காசி, விருத்தாசலம் தவிர கடந்த முறை நாங்கள் வென்ற 18 தொகுதிகளில் 16 தொகுதிகளை மீண்டும் நாங்கள் திரும்ப பெற்றிருக்கிறோம்.
இவ்வாறு செல்வபெருந்தகை கூறினார்.
காங்கிரஸ் தற்போது பெற்றுள்ள 28 தொகுதிகளில் இடைத்தேர்தல் மூலம் திமுக வசமான ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் காங்கிரஸ் வசமாகி உள்ளது, குறிப்பிடத்தக்கது.
