செப்.17ல் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்; 17 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்கு பிறகு வரும் செப்.,17ம் தேதி காலை 7:45 மணி முதல் 8:10 மணிக்குள் நடத்தப்பட உள்ளது.

கோயில்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஐதீகம். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2009 ஏப்.,8 ம் தேதி நடந்தது. அடுத்த 12 ஆண்டுகளில் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 2018 பிப்.,2ல் கோயிலின் வீரவசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் மண்டபம் சீரமைப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக கும்பாபிஷேகம் தள்ளிப்போனது.

தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கும்பாபிஷேகம் நடத்த கோயில் நிதி ரூ.15.81 கோடி மற்றும் உபயதாரர் நிதி ரூ.5.16 கோடி என மொத்தம் ரூ.32.28 கோடியில் 186 திருப்பணிகள் நடந்து வருகின்றன. வீரவசந்தராயர் மண்டபத்தை பழமை மாறாமல் சீரமைக்க ரூ.35.30 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகின்றன. இம்மாதம் இறுதிக்குள் நிறைவடையும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக சென்னையில் நேற்று அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் கூடுதல் தலைமை செயலர் மணிவாசன், துறை கமிஷனர் ஸ்ரீதர், கோயில் இணைகமிஷனர் சுரேஷ், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், ஸ்தானிக பட்டர்கள், ராஜா பட்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கோயில் திருப்பணிகள், வீரவசந்தராயர் மண்டப புனரமைப்பு பணிகள் மார்ச் இறுதிக்குள் நிறைவடைந்தாலும், சித்திரைத்திருவிழா என அடுத்தடுத்து நடக்கும் கோயில் திருவிழாக்களுக்கு இடையூறு இல்லாமல் வரும் செப்.,17ல் (ஆவணி 31-ம் தேதி) காலை 7:45 மணி முதல் 8:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

Source link