செம்மண் குவாரி வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டுள்ளார்.
2006 -2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் கனிமவளத்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மூத்த மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் பெயரில் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூந்துறை என்ற கிராமத்தில் செம்மண் குவாரி நடத்த அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி மற்றும் மற்றும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து அரசால் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக செம்மண் வெட்டி எடுத்ததாகவும், இதனால் அரசுக்கு 28 கோடியே 36 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் 2012 ஆண்டு வானூரில் தாசில்தாராக பணியாற்றி வந்த குமரபாலன் என்பவர் மாவட்ட குற்றப்பிரிவு பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி செம்மண் குவாரி நடத்த அனுமதி அளித்ததாக பொன்முடி மற்றும் செம்மண் குவாரி நடத்தி முறைகேட்டில் ஈடுபட்ட கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் குமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், சதானந்தம் உள்ளிட்ட எட்டு பேர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அதிமுக ஆட்சிக் காலத்தில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் பொன்முடி உள்ளிட்ட எட்டு பேரும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ஒருவர் குற்றச்சாட்டப்பட்ட 8 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீதமுள்ள ஏழு பேர் மீது விசாரணை நடைபெற்று வந்தது.
இதில் அரசு தரப்பு சாட்சிகளாக 57 பேர் சேர்க்கப்பட்டனர். இதில் ஏழு பேர் உயிரிழந்தனர். இந்தநிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் என மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி அறிவித்திருந்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பொன்முடி உள்ளிட்ட ஏழு பேர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த நிலையில் அவர்கள் மீண்டும் மூன்று மணிக்கு ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில் குற்றம் முழுமையாக நிரூபிக்கப்படாத காரணத்தினால் பொன்முடி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்து நீதிபதி மணிமொழி உத்தரவிட்டுள்ளார்.
