`செயல்பாடு அப்படி.!' அமைச்சர் மனோ தங்கராஜிக்கு சீட் இல்லை – பின்னணியில் மூன்று காரணங்கள்!

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க, பத்மநாபபுரம் என்ற ஒரே தொகுதியில் மட்டுமே வென்றது. அந்த தொகுதி இந்தமுறை கூட்டணி கட்சியான சி.பி.எம்-க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.

பத்மநாபபுரத்யில் வென்ற அமைச்சர் மனோ தங்கராஜ் கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலாளராக உள்ளார். பத்மநாபபுரம் தொகுதி இந்த முறை சி.பி.எம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு மனோ தங்கராஜுக்கு கல்தா கொடுக்கப்பட்டுள்ளதற்கு மூன்று காரணங்களை சொல்கிறார்கள்.

இதுபற்றி தி.மு.க விவரப்புள்ளிகள் கூறுகையில், “கடந்த 2021 தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 தொகுதிகளில் பத்மநாபபுரத்தில் மட்டும் தி.மு.க வென்றது. அதனால் மனோ தங்கராஜ் அமைச்சர் ஆக்கப்பட்டார்.

கடந்த முறை எம்.எல்.ஏ-வாக இருக்கும்போது மலைகளை பாதுகாக்கும் இயற்கை காவலன் போன்று தன்னை காட்டிக்கொண்டார் மனோ தங்கராஜ். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் எம்.எல்.ஏ-வாக இருந்தபோது கனிமவள கொள்ளைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர் இந்த ஆட்சியில் அமைச்சர் ஆனதும் மகன் மூலம் கல்குவாரிகளில் பணம் வசூல் செய்யத் தொடங்கிவிட்டார். மகனின் செயல்பாடுகளால் ஒருமுறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. மாவட்டத்தில் வேறு அமைச்சர் இல்லை என்பதால் 7 மாதங்களுக்குப்பின் மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

ஆனாலும், அவரது செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படவில்லை. இது மனோ தங்கராஜ் மீதான இமேஜை உள்ளூரில் காலி செய்தது. ‘மலைக்கள்ளன்’ மற்றும் மலை முழுங்கி மகாதேவன் என்ற பட்டப்பெயருடன் எதிர்கட்சிகள் விமர்சிக்கும் அளவுக்கு மனோ தங்கராஜின் செயல்பாடுகள் இருந்தன. இதனால் தொகுதியில் அவர்மீதான மரியாதை குறைந்தது. இந்த முறை அவரை ஓரம்கட்ட முதல் காரணம் இது.

ஜெயன் தங்கராஜ்

தி.மு.க கட்சியில் சீனியர்களை ஓரம் கட்டிவிட்டு அவர்ருக்கு வேண்டிய புதிய நிர்வாகிகளை கொண்டுவந்தார். 80 சதவீதம் பாரம்பரிய கட்சி நிர்வாகிகளின் பதவிகள் பறிக்கப்பட்டதுடன், மாற்று கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு பதவி வழங்கினார்.

சீனியர்களை புறம் தள்ளிவிட்டு அவரது மகனுக்கு தலைமை செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கினார். உதவி கேட்டுச் செல்லும் சொந்த கட்சியினருக்கு எதுவுமே செய்யவில்லை. அதன் எதிரொலியாகத்தான் சென்னையில் நடந்த நேர்காணலில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையிலேயே ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் மனோ தங்கராஜிக்கு எதிராக கொந்தளித்துவிட்டனர்.

அவர் கிள்ளியூர் தொகுதியைச் சேர்ந்தவர் என்பதால் அவரை பார்க்க பாலூர் கிராமத்துக்கு செல்லும் நிலை உள்ளது. பத்மநாபபுரம் மக்களை சந்திக்கவோ, கட்சி நிர்வாகிகளை சந்திக்கவோ தொகுதியில் கட்சி அலுவலகம் கூட சரியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இது அவருக்கு சீட் கிடைக்காமல் இருந்ததற்கு இரண்டாவது காரணம்.

மனோ தங்கராஜின் உடன் பிறந்த தம்பி ஜெயன் தங்கராஜ் வெளியிட்ட வீடியோக்கள்தான் மூன்றாவது காரணம். தேர்தல் அறிவித்த மறுநாளில் இருந்து மனோ தங்கராஜின் தனிப்பட்ட மோசமான செயல்பாடுகள் பற்றியும், பொதுவெளியில் அவரது செயல்பாடுகள் பற்றி விமர்சித்தும் வீடியோக்களை வெளியிட்டார். மனோ தங்கராஜ் தரப்பு அவரை தடுக்க முடியன்றனர். ஆனால், அவர் ஏற்கனவே திட்டமிட்டு வெளிமாநிலத்தில் பாதுகாப்பாக இருந்துகொண்டு தினமும் வீடியோ வெளியிட்டுக்கொண்டே இருந்தார்.

மனோ தங்கராஜ்
மனோ தங்கராஜ்

ஜெயன் தங்கராஜின் மகனை வைத்து டி.ஜி.பி அலுவலகம் வரை மனு அளிக்கவும் மனோ தங்கராஜ் தரப்பு நடவடிக்கை மேற்கொண்டது. ஜெயன் தங்கராஜ் அதற்கும் பதிலடி வழங்கும் வகையில் வீடியோ வெளியிட்டு அதிரடித்தார்.

தொகுதி மக்களுக்கும், மாவட்டத்துக்கும் எதுவும் செய்யாமல் கனிமவள கடத்தலுக்கு துணைபோனது, சொந்த கட்சியினரை கண்டுகொள்ளாததால் நிர்வாகிகள் எதிராக மாறியது மற்றும் குடும்பத்தில் இருந்து சொந்த தம்பி அவரை டேமேஜ் செய்தது ஆகிய மூன்று காரணங்களால் மனோ தங்காராஜிக்கு சீட் பறிபோகும் என்பது எதிர்பார்த்ததுதான்.

ஆனால், வேட்பாளரை மாற்றுவார்கள் என எதிர்பார்த்த நிலையில் தொகுதி கூட்டணிக்கு தாரை வார்க்கும் முடிவை தலைமை எடுத்துள்ளது சற்று வருத்தம்தான்” என்றனர்.

Source link