“செல்லபாண்டி ஏராளமான திட்டங்களைச் செய்து தரப்போகிறார்”

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்துட்குட்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (11-04-26) புதுக்கோட்டையில் நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் வாக்கு சேகரித்தார். அதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “புதுக்கோட்டை திமுகவின் கோட்டை. தொடர்ந்து 2வது முறையாக திமுக ஆட்சி அமைக்க புது வரலாற்றை படைக்க புதுக்கோட்டைக்கு வந்திருக்கிறேன். புதுக்கோட்டையின் சிறப்புகள் குகை, கோவில்கள், கல்வெட்டுகள், தொல்லியல் சின்னங்கள் என எங்கு பார்த்தாலும் தமிழ்நாட்டின் வரலாற்றையும் பண்பாட்டையும் சொல்லக்கூடிய ஊர் தான் புதுக்கோட்டை. புதுக்கோட்டைக்கு என்றே ஒரு வரலாறு இருக்கிறது. இங்கு இரண்டு இளைஞர்கள் இருந்தார்கள். கீரனூர் முத்து மற்றும் விராலிமலை சண்முகம். இன்றைய இளைஞர்கள் அவர்களுடைய வரலாற்றை தெரிந்துகொள்ள வெண்டும். 1965இல் தாய்த் தமிழை காப்பதற்காக தங்களுடைய உயிரைத் தந்த இளைஞர்கள் அவர்கள். அப்படிப்பட்ட மொழிப்போர் தியாகிகளை தந்த புதுக்கோட்டைக்கு வந்திருக்கிறேன்.

தமிழுக்கு மீண்டும் பா.ஜ.க அரசால் ஆபத்து வந்திருக்கிறது. அந்த பா.ஜ.கவையும் அவர்களை தூக்கி சுமக்கிற அதிமுகவையும் வேரோடு வேரிடி மண்ணோடும் வீழ்த்த உங்கள் ஆதரவை கேட்டு வந்திருக்கிறேன். இந்த தேர்தலில் ஜெயிக்கப்போவது தமிழ்நாடா? டெல்லியா?. தமிழ்நாட்டுக்கு மக்களாட்சி தேவையா? சர்வாதிகாரம் தேவையா? மக்களாட்சி என்பது தான் மக்களுடைய தீர்ப்பு, பதில். இதை ஏப்ரல் 23ஆம் தேதி அன்று ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் காட்டணும், நிரூபிக்கணும். அதற்கு வேட்பாளர்களை அறிமுகப்படுத்துகிறேன். விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் நமது வெல்லும் வேட்பாளர் கே.கே.செல்லபாண்டி போட்டியிடுகிறார். இவர் வழக்கறிஞர், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழகத்துடைய செயலாளர். விராலிமலை தொகுதிக்கு நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற அரசு கலை கல்லூரி உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை செய்து தரப்போகிறார். இவருக்கு இவருக்கு நீங்கள் எல்லோரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்று கூறி விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கு கே.கே.செல்லபாண்டியை திமுக வேட்பாளராக அறிமுகப்படுத்தினார். 

Source link