மெனோர்கா: மெனோர்கா மாஸ்டர்ஸ் செஸ் 3வது சுற்றில் இந்தியாவின் குகேஷ் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
ஸ்பெயின் கட்டுப்பாட்டில் உள்ள மெனோர்கா தீவில், சர்வதேச மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நடக்கிறது. இதில் ‘நடப்பு உலக சாம்பியன்’ இந்தியாவின் குகேஷ், நிஹால் சரின், ஹரிகிருஷ்ணா உள்ளிட்ட 6 பேர் பங்கேற்கின்றனர்.
மூன்றாவது சுற்றில் குகேஷ், நிஹால் சரின் மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய நிஹால் சரின் 34வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இந்தியாவின் ஹரிகிருஷ்ணா (கருப்பு), உக்ரைனின் ரஸ்லன் பொனோமரியோவ் (வெள்ளை) மோதிய மற்றொரு 3வது சுற்று போட்டி 23வது நகர்த்தலில் ‘டிரா’ ஆனது.
மூன்று சுற்றுகளின் முடிவில் 2 வெற்றி, ஒரு தோல்வி என, 2 புள்ளிகளுடன் நிஹால் சரின் முதலிடத்தில் உள்ளார். ஹரிகிருஷ்ணா, பொனோமரியோவ், ரிச்சர்ட் ராபோர்ட் (ஹங்கேரி), லீனியர் டொமிங்குவெஸ் பெரெஸ் (அமெரிக்கா) தலா 1.5 புள்ளிகளுடன் 2வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். குகேஷ் (1 புள்ளி) 6வது இடத்தில் உள்ளார்.
