புதுடில்லி: பாதுகாப்பு காரணங்களுக்காக கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் இருந்து விலகினார் ஹம்பி.
‘கேண்டிடேட்ஸ்’ செஸ் தொடர் (ஆண்கள், பெண்கள்) வரும் 28 முதல் ஏப்ரல் 16 வரை, மேற்காசியாவில் உள்ள சைப்ரஸ் தீவில் நடக்க உள்ளது. ஆண்கள் பிரிவில் இந்தியாவின் பிரக்ஞானந்தா உட்பட 8 பேர் பங்கேற்க உள்ளனர். இதில் வெற்றி பெறும் வீரர், உலக சாம்பியன் பட்டத்திற்காக, நடப்பு சாம்பியன், இந்தியாவின் குகேஷை எதிர்த்து களமிறங்கலாம்.
பெண்கள் பிரிவில் திவ்யா, ஹம்பி, வைஷாலி என 3 இந்தியர் உட்பட 8 பேர் பங்கேற்பர். இதில் வெல்லும் வீராங்கனை, நடப்பு உலக சாம்பியன், சீனாவின் ஜு வென்ஜுனுடன் மோதுவார்.
இதனிடையே அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் தொடுத்ததால், வளைகுடா நாடுகளில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. தொடரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்,’ என்ற கோரிக்கையை ஏற்க சர்வதேச செஸ் கூட்டமைப்பு (‘பிடே’) மறுத்தது.
இதனால், கேண்டிடேட்ஸ் தொடரில் இருந்து இந்தியாவின் ஹம்பி விலகினார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,’ நீண்ட யோசனைக்குப் பின் பெண்களுக்கான கேண்டிடேட்ஸ் தொடரில் இருந்து விலகுகிறேன். இது கடினமான முடிவு. எவ்வளவு முக்கிய தொடராக இருந்தாலும், தனிப்பட்ட பாதுகாப்பு, நலனுக்கு முன், எதுவும் பெரியதல்ல. பாதுகாப்பு தொடர்பாக உறுதிமொழிகள் வழங்கப்பட்டாலும், நான் பாதுகாப்பாக உணரவில்லை,’ என தெரிவித்துள்ளார்.
