ஆமதாபாத்: உலக கோப்பை நாயகன் சஞ்சு சாம்சனை, ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். சேட்டன் (அண்ணன்) என்று அழைத்தவர்கள், இவரது ஆக்ரோஷ ஆட்டத்தை பார்த்து, ‘சீட்டா’ (சிறுத்தை) சாம்சன் என வர்ணிக்கின்றனர்.
இந்திய அணி விக்கெட் கீப்பர், பேட்டர் சஞ்சு சாம்சன் 31. சீரான ரன் குவிப்பை வெளிப்படுத்த தவறியதால், ‘டி-20’ அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல், 11 ஆண்டுகளாக தவித்து வந்தார். ‘டி-20’ உலக கோப்பை தொடரில் திறமை நிரூபித்தார். 24, 97, 89, 89 என விளாச, இந்தியா உலக கோப்பை கைப்பற்றியது. சாம்சன் தொடர் நாயகன் விருது வென்றார்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறியது:
வாழ்க்கை ஒரு வட்டம் என்பது சாம்சன் விஷயத்தில் சரியாக நடந்துள்ளது. நியூசிலாந்து தொடரில் தடுமாறியதால், அணியில் இருந்து நீக்கப்பட்டார். உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான காலிறுதி போன்ற போட்டியில் 97 ரன் விளாசி, இந்திய அணியை அரையிறுதிக்கு கொண்டு சென்றார். பின் இங்கிலாந்து (89 ரன்), அடுத்து, முக்கியமான நியூசிலாந்துக்கு எதிரான பைனல் (89) என தொடர்ந்து மூன்று முக்கிய போட்டியில் ரன் மழை பொழிந்தார். இது அவ்வளவு எளிதல்ல.
நெருக்கடியான போட்டிகளில் சிறப்பாக செயல்படுவது எப்போதும் ஸ்பெஷலாக இருக்கும். இது அவரது எதிர்காலத்தை தீர்மானிக்கும். தொடர்ந்து சறுக்கியதால் கிடைத்த காயங்களின் தழும்புகளால் தவித்த சாம்சன் எழுச்சி பெற்றுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
சச்சின் ‘அட்வைஸ்’
சாம்சன் கூறுகையில்,” எல்லாம் ஒரு கனவு போல உள்ளது. நியூசிலாந்து தொடருக்குப் பின் முற்றிலும் உடைந்து விட்டேன். கடவுள் வேறு திட்டம் வைத்து இருந்தார் போல. பல முன்னாள் வீரர்கள் ‘அட்வைஸ்’ செய்தனர். கடந்த இரு மாதம் ‘ஜாம்பவான்’ சச்சினுடன் தொடர்ந்து பேசி வந்தேன். இவரது வழிகாட்டுதலை விட வேறு என்ன எனக்கு வேண்டும்,” என்றார்.
கேரளாவில் வரவேற்பு
கேரளாவின் திருவனந்தபுரம், புல்லுவிழா கிராமத்தை சேர்ந்தவர் சாம்சன். கேரளாவை பெருமைப்படச் செய்த இவருக்கு, அரசு சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட உள்ளது.
இந்திய கிரிக்கெட்டின் சிறந்த தருணம்
கவாஸ்கர் கூறுகையில்,” இருதரப்பு தொடரில் ஆதிக்கம் செலுத்துவது போல, ஐ.சி.சி., தொடர்களில் கோப்பை வெல்வது எளிதல்ல. இங்கு தவறுகளுக்கு இடமில்லை. ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இங்கு அதிர்ஷ்டத்திற்கு இடமில்லை, இது திறமை சம்பந்தப்பட்டது. நுாறு கோடிக்கும் மேலான மக்களின் பிரதிநிதியாக களமிறங்கும் போது, நெருக்கடி அதிகமாக இருக்கும். ‘டி-20’ உலக கோப்பை அரங்கில் எந்த அணியும் அடுத்தடுத்து சாதித்தது இல்லை. ஏனெனில் மிக கடினம். இம்முறை நாம் சாதித்தது பெரிய சாதனை. இந்திய கிரிக்கெட்டின் சிறந்த தருணம் இது,” என்றார்.
