சென்னை: ‘துணை முதல்வர் உதயநிதி போட்டியிடும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில், பதற்றமான ஓட்டுச்சாவடிகள் நீக்கப்பட்டுள்ளன’ என, அ.தி.மு.க., தரப்பில், தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் மனு அளித்த பின், அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு செயலர் இன்பதுரை அளித்த பேட்டி: துணை முதல்வர் உதயநிதி போட்டியிடும், சேப்பாக்கம் தொகுதியில், புதுமையான முறைகேடு நடந்துள்ளது. கடந்த 2024ல் நடந்த, லோக்சபா தேர்தலின்போது, அத்தொகுதியில் உள்ள மாட்டாங்குப்பம், அயோத்திகுப்பம் உள்ளிட்ட இடங்களில், 22 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என வகைப்படுத்தப்பட்டு இருந்தன.
தற்போது, பதற்றமான ஓட்டுச்சாவடிகள் பட்டியலில், அவை இல்லை. யார் புனித நீர் தெளித்த அவற்றை சாதாரண ஓட்டுச்சாவடியாக மாற்றினர் என்பது புரியாத புதிராக உள்ளது. இதுபோன்ற பதற்றமான ஓட்டுச்சாவடிகள் இருக்கும் பகுதிகளில், மத்திய பாதுகாப்பு படை பேரணி நடத்தப்படும். தேர்தல் பார்வையாளர்களின் சிறப்பு கண்காணிப்பு இருக்கும்.
அங்குள்ள ரவுடிகள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவர். இதனால், பயமின்றி பொதுமக்கள் ஓட்டளிக்க முன்வருவர். தற்போது அங்கு நிலைமை மாறியுள்ளது. இது குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளோம்.மூன்று நாட்களுக்கு முன்பு, மதுரை சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலையத்தில், மர்ம மரணம் நடந்துள்ளது. அங்கு நாராயணன் என்பவர் தீக்குளித்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்துள்ளார்.
சொத்து தகராறு தொடர்பாக, அவர் போலீஸ் நிலையம் சென்றுள்ளார். தி.மு.க., நிர்வாகி அழுத்தம் காரணமாக, தனது மகள்கள் மீது விபசார வழக்குப்பதிவு செய்யப்படும் என, போலீசார் கூறியதால், அவர் மனமுடைந்து பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துள்ளதாக தெரிகிறது. தனக்கு நீதி கேட்டு போலீஸ் நிலையத்தை அணுகியவர், இன்று உயிருடன் இல்லை. தமிழகதத்தில் சட்டம் – ஒழுங்கு இப்படித்தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
