சேலம்: சேலம் விமான நிலையத்தில் இருந்து சென்னை புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
சேலம் விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு 65 பயணிகளுடன் இண்டிகோ விமானம் புறப்பட தயாரானது. கடைசி நேரத்தில் விமானத்தில் மேற்கொண்ட சோதனையில் இறக்கையின் வலது புறத்தில் உள்ள பேன் பழுதாகி இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டு கோளாறை சரி செய்யும் பணி நடந்தது.
பேனை பழுது நீக்கும் பணி இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. தொழில்நுட்ப நிபுணர்கள் நீண்ட நேரம் போராடி கோளாறை சரி செய்தனர். பிறகு விமானம் மீண்டும் பயணிகளை ஏற்றுக் கொண்டு சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது. இரண்டு மணி நேரத்திற்கு மேலாக, விமானம் தாமதமாகப் புறப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
விமானத்தில் முன்னதாகவே பழுது கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. விமானத்தில் சென்னை செல்ல இருந்த பயணி ஒருவர் கூறுகையில், ‘நான் சென்னைக்கு அவசர வேலையாக செல்ல இருந்தேன். தற்போது இரண்டு மணி நேரத்திற்கு மேலாக விமானம் நிறுத்தப்பட்டதால் எனது பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எனக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது’ என்றார்.
