சொன்னதை செய்வாரா சஞ்சு சாம்சன்: சென்னை-ராஜஸ்தான் மோதல்

கவுகாத்தி: சென்னை அணி தனது முதல் லீக் போட்டியில் இன்று ராஜஸ்தானை எதிர்கொள்கிறது.

அசாமின் கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடக்கும் லீக் போட்டியில் சென்னை, ராஜஸ்தான் மோதுகின்றன. கடந்த முறை ராஜஸ்தானுக்காக பங்கேற்ற சஞ்சு சாம்சன், இம்முறை சென்னை அணிக்காக களமிறங்குகிறார். இதே போல சென்னை அணிக்காக விளையாடிய ரவிந்திர ஜடேஜா, தற்போது ராஜஸ்தானுக்காக களம் காண்கிறார். இருவரும் அணி மாறிய நிலையில், நேருக்நேர் மோதலை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

சென்னை அணியை பொறுத்தவரை, கால் தசை பிடிப்பு காரணமாக அனுபவ தோனி, 44, முதல் இரு வாரங்களுக்கு போட்டிகளில் பங்கேற்காதது பலவீனம். இவர், கவுகாத்தி செல்லவில்லை. சென்னையிலேயே தங்கி சிகிச்சை பெறுகிறார்.

‘சேட்டன்’ திட்டம்: துவக்கத்தில் ‘கீப்பர்-பேட்டர்’ சஞ்சு சாம்சன், கேப்டன் ருதுராஜ் களமிறங்க உள்ளனர். ‘டி-20’ உலக கோப்பை தொடரில் ‘ஹாட்ரிக்’ அரைசதம் கடந்த சாம்சன், இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல கைகொடுத்தார். சமீபத்தில் சென்னையில் நடந்த விழாவில் தனது திட்டம் பற்றி ‘சேட்டன்’ சாம்சன் கூறுகையில்,”பந்தை பார்த்து சுத்துறோம். ‘மேக்சிமம்’ சிக்சர் அடிக்கிறோம். தட்றோம்…துாக்றோம்,” என்றார். இதற்கேற்ப இவர் விளாசினால், சென்னை அணி வெற்றியுடன் துவக்கலாம்.

தோனி இல்லாத நிலையில், களத்தில் அனைத்து முடிவுகளையும் ருதுராஜ் எடுக்க வேண்டும். 3வது இடத்தில் ஆயுஷ் மாத்ரே களமிறங்குவார். அடுத்து பிரவிஸ், ஷிவம் துபே வரலாம். தோனிக்கு பதிலாக ‘ஆல்-ரவுண்டர்’ பிரஷாந்த் வீர் அல்லது அதிரடி பேட்டரான ‘காஸ்ட்லி’ கார்த்திக் சர்மா (ரூ. 14.2 கோடி) இடம் பெறலாம். கடந்த முறை சென்னை அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் (10வது) பிடித்தது. இம்முறை கவனமாக செயல்பட வேண்டும்.

பந்துவீச்சில் மிரட்ட கலீல் அஹமது, ஓவர்டன், கம்போஜ், மாட் ஹென்றி, நுார் அகமது, அகீல் ஹூசைன் உள்ளனர்.

ஹெட்மெயர் நம்பிக்கை: ராஜஸ்தான் அணி கடந்த முறை 9வது இடம் பிடித்து ஏமாற்றியது. ரியான் பராக் தலைமையில் களமிறங்குகிறது. துவக்கத்தில் ஜெய்ஸ்வால், இளம் வைபவ் சூர்யவன்ஷி ரன் குவிக்கலாம். 3வது இடத்தில் ‘அதிரடி’ நாயகன் ஹெட்மெயர் வரலாம். கடைசி கட்டத்தில் ஷனகா, ரவிந்திர ஜடேஜா அசத்தலாம். ‘வேகத்தில்’ ஜோப்ரா ஆர்ச்சர், சந்தீப் சர்மா, ‘சுழலில்’ ஜடேஜா, பிஷ்னோய் கைகொடுக்கலாம்.

யார் ஆதிக்கம்

ஒட்டுமொத்தமாக இரு அணிகளும், 31 போட்டிகளில் மோதின. சென்னை 16, ராஜஸ்தான் 15ல் வென்றன.

* கவுகாத்தி, பர்சபரா மைதானத்தில் ஒரு முறை (2025) மோதின. இதில் ராஜஸ்தான் அணி, சென்னையை வீழ்த்தியது.

மழை வருமா

பர்சபரா மைதான ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமானது.

* கவுகாத்தியில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உண்டு.

Source link