பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, காக்கரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே (இடது), ஜூலை 18, 2026 அன்று புது டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
பிரசுரிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை சனிக்கிழமை அதிகாலை ஜந்தர் மந்தரில் இருந்து டெல்லி காவல்துறை வலுக்கட்டாயமாக அகற்றி சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது.
சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி, தனது கணவர் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார்.
தனது சம்மதம், குடும்பத்தினரின் சம்மதம் மற்றும் சோனம் வாங்சுக்கின் உடல்நிலையைக் கண்காணிக்கும் மருத்துவர்களின் அனுமதியின்றி, அவருக்கு வாய் வழியாகவோ அல்லது நரம்பு வழியாகவோ எந்த மருந்தையோ அல்லது திரவத்தையோ வழங்கக்கூடாது என்று கீதாஞ்சலி கேட்டுக்கொண்டார்.
நீட் தேர்வில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராக, சோனம் வாங்சுக் கடந்த 20 நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். ஆனால், சனிக்கிழமை காலை அவர் அங்கிருந்து அகற்றப்பட்டார்.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரிலேயே சோனம் வாங்சுக் அங்கிருந்து அகற்றப்படுவதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைந்தால், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம் என்பதே டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அர்த்தம்.
விவசாயத் தலைவர் தல்லேவால் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?
சட்டங்களுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒருவரின் உயிரைப் பாதுகாப்பது அரசின் பொறுப்பு என்பதை உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகள் தெளிவாக வலியுறுத்தியுள்ளன.
இருப்பினும், அதேநேரத்தில், கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தும் அவரது உரிமையில் எந்தவிதமான தடையும் ஏற்படாமல் இருப்பதும் உறுதி செய்யப்பட வேண்டும்.
சோனம் வாங்சுக் விவகாரத்தில், “ஒவ்வொரு குடிமகனின் உயிரும் விலைமதிப்பற்றது” என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியிருந்தது.
கடந்த 2024ஆம் ஆண்டில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயத் தலைவர் ஜக்ஜீத் சிங் தல்லேவாலுக்கு போதுமான மருத்துவ உதவியை வழங்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் அவர் தனது போராட்டத்தைத் தொடர எடுக்கும் முடிவை மதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கும் பஞ்சாப் அரசுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, விவசாயத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால், மோடி அரசாங்கத்தின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
எழுபது வயதுக்கும் மேற்பட்ட தல்லேவால், 2024ஆம் ஆண்டின் இறுதியில், விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா எல்லையில் உள்ள ஷம்பு மற்றும் கனௌரி எல்லையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது உண்ணாவிரதம் 20 நாட்களைக் கடந்திருந்தது.
நவம்பர் 26, 2024 அன்று, தல்லேவாலை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அகற்றிய காவல்துறை, லூதியானாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தது. இருப்பினும், விவசாயிகளின் அழுத்தம் காரணமாக, தல்லேவாலை காவல்துறை விடுவித்தது.
அப்போது, தல்லேவாலின் வயது, அவரது உடல்நலம் தொடர்பான சிக்கல்கள் மற்றும் அவர் ஒரு முக்கியக் குடிமகன் என்ற உண்மையை மத்திய அரசும் பஞ்சாப் அரசும் கவனத்தில் கொள்ள வேண்டும் என நீதிமன்றம் கூறியிருந்தது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தைத் திட்டமிட்டிருந்த பாபா ராம்தேவை தடுப்பதற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் முயன்றதாக உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பொன்றில் குறிப்பிட்டிருந்தது.
பாபா ராம்தேவ் விவகாரத்தில் நீதிமன்றத்தின் நிலைப்பாடு
இதேபோன்றதொரு தீர்ப்பை பாபா ராம்தேவ் விவகாரத்திலும் நீதிமன்றம் வழங்கியிருந்தது. 2011ஆம் ஆண்டு டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் அது குறிப்பிட்டிருந்தது.
‘தி இந்து’ நாளிதழின்படி, அந்த நேரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த முடிவில், ஊழலுக்கு எதிராக பாபா ராம்தேவ் திட்டமிட்டிருந்த உண்ணாவிரத போராட்டத்தைத் தடுக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முயன்றதாகக் கூறியிருந்தது.
அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், உண்ணாவிரத முடிவைக் கைவிடுமாறு பாபா ராம்தேவை வற்புறுத்துவதற்கு “தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும்” மேற்கொண்டார் என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அந்தத் தீர்ப்பின்படி, “கருப்புப் பணத்தை மீட்பது தொடர்பான விவகாரத்தில் அரசின் மந்தமான செயல்பாட்டிற்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, மே 4, 2011 அன்று பாபா ராம்தேவ் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில், மே 19, 2011 அன்று பிரதமர் அவருக்கு எழுதிய கடிதத்தில், ஊழலை ஒழிப்பதில் அரசு உறுதியாக இருப்பதாகத் தெரிவித்து, உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.”
ஜூன் 1, 2011 அன்று பாபா ராம்தேவ் டெல்லி வந்தடைந்தபோது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நான்கு மூத்த அமைச்சர்கள் அவரை விமான நிலையத்திலேயே சந்தித்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று சமாதானப்படுத்த முயன்றனர் என்பதும் அதே தீர்ப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பின்னர், டெல்லி என்.சி.ஆர் பகுதியிலுள்ள ஹோட்டல் கிளாரிஸில், அமைச்சர்களுக்கும் பாபா ராம்தேவுக்கும் இடையே இந்தப் பிரச்னை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சோனம் வாங்சுக்கிற்கு ஆதரவாகப் போராட்டம்
‘உண்ணாவிரதம் இருப்பவர்களுடன் மோதல் போக்கை மேற்கொள்ள வேண்டாம்’
‘தி இந்து’ நாளிதழ் தனது செய்தியில், “அரசாங்கத்திடம் தனது கருத்தை முன்வைக்க உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளும் நபர்களிடம் அரசாங்கம் மோதல் போக்கை கடைப்பிடிக்கக் கூடாது என்பதை உச்ச நீதிமன்றம் தனது பல தீர்ப்புகளில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதாக” எழுதியுள்ளது.
“சமூக நல்லிணக்கம் சீர்குலைதல், சமூகக் குழப்பம் ஏற்படுதல் அல்லது பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தல் போன்ற உண்மையான, நியாயமான காரணங்கள் இருந்தால் மட்டுமே கருத்து சுதந்திரத்தில் தலையிட முடியும்” என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
“உண்ணாவிரதப் போராட்டம் என்பது அரசியலமைப்புக்கு முரணானது அல்ல, எந்தவொரு சட்டத்தின் கீழும் அது தடை செய்யப்படவில்லை.”
“அரசின் ஏதேனும் ஒரு முடிவு அல்லது நடவடிக்கைக்கு எதிராக ஒரு நபர் மேற்கொள்ளும் காலவரையற்ற உண்ணாவிரதத்தை பொது ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட முடியாது.”
“இது எதிர்ப்பை வெளிப்படுத்தும் ஒரு வழி, இதற்கு வரலாறும் நமது அரசியலமைப்புச் சட்டமும் அங்கீகாரம் அளித்துள்ளன. மகாத்மா காந்தியின் சத்தியாகிரகத்தில் இருந்து இது உத்வேகம் பெறுகிறது” என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
மேலும், இத்தகைய வழக்குகளில், சம்பந்தப்பட்ட நபரின் உயிரைக் காக்க அரசாங்கம் முன்வந்து அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டியது அதன் கடமை என்பதையும் நீதிமன்றம் வலியுறுத்தியது.
ஏதேனும் ஒரு கோரிக்கையை வலியுறுத்தி பல நாட்களாக உண்ணாவிரதம் இருப்பது மற்றும் மருத்துவ சிகிச்சையை வழங்க அதிகாரிகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் இருப்பது சட்டத்தின்கீழ் குற்றமாகக் கருதப்படுமா?
பிப்ரவரி 2021இல், சென்னை உயர் நீதிமன்றம் இந்த சட்டக் கேள்விக்கு ‘இல்லை’ என்று தெளிவாக பதிலளித்தது. இதுபோன்ற ஒரு வழக்கைத் தள்ளுபடி செய்தபோது நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், “உண்ணாவிரதப் போராட்டம் சட்டத்தின்கீழ் குற்றமாகாது. பதிவில் உள்ள அனைத்து உண்மைகளையும் அப்படியே ஏற்றுக் கொண்டாலும்கூட, எந்தக் குற்றமும் நிரூபிக்கப்படாது” என்று கூறினார்.
மனுதாரர் பி. சந்திரகுமார், 2013ஆம் ஆண்டு பூந்தமல்லி கிளைச் சிறை வளாகத்தில் இயங்கிய சிறப்பு அகதிகள் முகாமில் வைக்கப்பட்டு இருந்ததாக வழக்கறிஞர் பி. புகழேந்தி நீதிமன்றத்தில் தெரிவித்தார். சாதாரண அகதிகள் முகாம்களைப் போலன்றி, சிறப்பு முகாம்களில் தங்கி இருப்பவர்களுக்கு நடமாடும் சுதந்திரம் இருக்கவில்லை, வெளியே செல்லவும் அவர்களுக்கு அனுமதி இல்லை. இதைக் கண்டித்து, மனுதாரர் ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 24, 2013 வரை சுமார் 10 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
சுமார் 10 நாட்கள் நீடித்த இந்தப் போராட்டத்தால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டபோது, உள்ளூர் வட்டாட்சியர் அவருக்கு மருத்துவ உதவி வழங்க முயன்றார். ஆனால் அவர் சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. வாழும் உரிமை (பிரிவு 21), பேச்சு சுதந்திரத்துடன் கூடிய அமைதியான போராட்ட உரிமை (பிரிவு 19) ஆகியவற்றுக்கு இடையே சமநிலையைப் பேணுவதை நீதித்துறை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, சோனம் வாங்சுக்கைக் காவல்துறை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றது
‘காவல்துறையின் நடவடிக்கை நீதிமன்ற அவமதிப்பாகும்’
காவல்துறையின் இந்த நடவடிக்கையை ‘நீதிமன்ற அவமதிப்பு’ என்று காக்கரோச் ஜனதா கட்சி வர்ணித்துள்ளது. அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் இதுகுறித்துப் பேசியபோது, “சோனம் வாங்சுக்கின் உடல்நிலையைக் கண்காணிக்க வேண்டுமென டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து, உயிருக்கு ஆபத்தான சூழல் ஏற்பட்டால் மட்டுமே மருத்துவரின் ஆலோசனைப்படி அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்பது அந்த உத்தரவு,” என்றார்.
“இதுதான் டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவு. ஆனால் டெல்லி காவல்துறை தவறாக வழிநடத்துகிறது. நீதிமன்றத்தின் அதே உத்தரவின் காரணமாகவே சோனம் வாங்சுக்கை அழைத்துச் செல்ல வந்ததாக அவர்கள் கூறுகின்றனர். இது பொய் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு. நீதிமன்ற உத்தரவை தவறாகப் பொருள் கொண்டு அவர்கள் சோனம் வாங்சுக்கை அழைத்துச் சென்றுள்ளனர்,” என்று அவர் குற்றம் சாட்டினார்.
சோனம் வாங்சுக் கட்டாயப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதற்கு, காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத் துறைத் தலைவர் பவன் கேரா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், “நமது அரசியலமைப்பு சட்டம் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவிக்கும் உரிமையை வழங்குகிறது. ஆனால், இந்த உரிமையை ஒடுக்குவதில் உள்துறை அமைச்சகம் முனைப்புடன் இருப்பது போலத் தெரிகிறது” என்று விமர்சித்துள்ளார்.
“டெல்லி காவல்துறை நேரடியாக உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்த அமைச்சகம் வெள்ளிக்கிழமைதான் டெல்லியின் புதிய காவல்துறை ஆணையரை நியமித்தது. சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை அவரது பதவிக் காலத்தின் முதல் உத்தரவு என்றால், அரசியலமைப்பு கடமைகளைவிட அரசியல் உத்தரவுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்ற மிகவும் கவலையளிக்கும் செய்தியை இது தருகிறது,” என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரபல வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷண் இது குறித்த தனது பதிவில், “சிஜேபி போராட்டமும் வாங்சுக்கின் உண்ணாவிரதமும் தானாகவே முடிந்துவிடும் என்று கருதிய அரசு, ஆரம்பத்தில் அதைப் புறக்கணித்தது. ஆனால், ஜந்தர் மந்தரில் ஆதரவு பெருகி, கூட்டம் அதிகரிப்பதைப் பார்த்தவுடன் அரசு இறுதியாகப் பதற்றமடைந்துள்ளது” என்று எழுதியுள்ளார்.
“வரும் 20ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி திட்டமிடப்பட்டுள்ள பேரணி மிகப்பெரிய அளவில் அமையப் போகிறது. இதைத் தடுக்க அரசு ஒட்டுமொத்த நகரையும் முடக்கிவிடுமா?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வழக்கறிஞர் ஆஷிஷ் கோயல் இது தொடர்பாக எழுதியுள்ள பதிவில், “ஆளும் அரசாங்கத்திடம் பொறுப்புக்கூறல் கோரி ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும்போது, அந்த நபர் எப்போது, எப்படி, எங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் அந்த அரசுக்கு வழங்கப்படக் கூடாது. அவ்வாறு செய்வது, அரசாங்கம் தன்னிச்சையாகத் தலையிட்டு உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவர வழிவகுக்கும். இது மிகவும் ஆபத்தான, பாசிச போக்குக்கான அடையாளம்” என்று கூறியுள்ளார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




