சோளிங்கர்:''தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என, பா.ஜ., கட்சியினர் வாட்ஸாப்பில் அவதுாறு பரப்பி

சோளிங்கர்:”தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என, பா.ஜ., கட்சியினர் வாட்ஸாப்பில் அவதுாறு பரப்பி வருகின்றனர்,” என, கனிமொழி எம்.பி., குற்றஞ்சாட்டினார்

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் காங்., வேட்பாளர் ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ.,வை ஆதரித்து கனிமொழி எம்.பி., பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

மகளிர் உரிமை தொகையை வழங்க முடியாது என எதிர்கட்சியினர் கூறினர். ஆனால்,1 கோடியே 30 லட்சம் பெண்களுக்கு, தி.மு.க., அரசு மகளிர் உரிமை தொகையை வழங்கியது. வருகிற ஆட்சியில் மகளிர் உரிமை தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

100 நாள் வேலையை நிறுத்த கூடிய ஆட்சியாக மோடி ஆட்சி உள்ளது. நமக்கு எதிராக அணிவகுத்துள்ள அணி, தமிழகத்திற்கு எதிரான அணி. அவர்கள், இந்தியாவில் அம்பானி, அதானியை தவிர வேறு எதையும் மேக் இன் இந்தியா செய்யவில்லை. அவர்கள் இருவரையும் தான் வளர்த்து விட்டிருக்கிறார்கள். மோடியை பார்த்து இபிஎஸ் கைகட்டி பயந்து கொண்டு நிற்கிறார்.

ஆனால், மோடி அமெரிக்காவை பார்த்து பயந்து கொண்டிருக்கிறார். போர் நடக்க கூடிய சூழலில், கியாஸ் சிலிண்டருக்கு நிற்க கூடிய நிலையில் உள்ளோம். சிலிண்டர் தட்டுப்பாட்டை சரிசெய்து விட்டு வாருங்கள் என அவர்களை திருப்பி அனுப்புங்கள். மத்திய பட்ஜெட்டில், தமிழகத்தின் பெயரும் இல்லை. திருக்குறளையும் மறந்துவிட்டார்கள்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்கிறார்கள். வேறு ஏதும் குறை சொல்வதற்கு இல்லை. பா.ஜ., தாங்கள் நினைக்கிற பொய்களை வாட்ஸாப்பில் பரப்பி வருகிறார்கள். அதில் ஒன்று தான், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்கிற குற்றச்சாட்டு.

யார் தவறு செய்தாலும் சட்டப்படி தண்டனை வாங்கி கொடுக்கும் ஆட்சி தி.மு.க., ஆட்சி. தேசிய அளவில் சட்டம் ஒழுங்கின் நிலை என்ன? அ.தி.மு.க., ஆட்சியில் 3 லட்சத்திற்கும் அதிகமாக குற்றங்கள் பதிவு செய்யப்பட்டது. தி.மு.க., ஆட்சியில் 2 லட்சமாக குற்றங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில், தேசிய சராசரியில் உ.பி.,யை விட தமிழகம் குறைவாக உள்ளது. அதனையும் குறைக்க ஆட்சியை நடத்தி வருகிறோம். எங்களை குற்றம் சொல்ல உங்களுக்கு எந்தவித அருகதையும் இல்லை. நாம் வரி கட்டினால், மற்ற மாநிலங்களை விட குறைவாக வழங்கி ஓரவஞ்சனை காட்டுகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Source link