‘டூப்’ விஜயால் த.வெ.க., வேட்பாளர்கள் கிண்டல், கேலிக்கு ஆளானதால், ‘டூப்’ விஜய் ஓரங்கட்டப்பட்டார்.
இந்த தேர்தலில், குறிப்பிட்ட சில இடங்களுக்கு விஜய் பிரசாரத்திற்கு செல்லும்போது, விபத்து போன்ற பல்வேறு பிரச்னைகள் எழுகின்றன. கூடுமானவரை போலீஸ் அனுமதியோடு பிரசாரத்தை மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார்.
இதையடுத்து, திருச்சி திருவெறும்பூர் த.வெ.க., வேட்பாளர் நவல்பட்டு விஜி, விஜய் பொம்மையை வைத்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அவரை தொடர்ந்து, சென்னை கொளத்துார் தொகுதியில் த.வெ.க., சார்பில் போட்டியிடும் வி.எஸ்.பாபுவும், விஜய்மதி, 28, என்பவரை விஜய் போலவே ‘டூப்’ போட்டு, உடன் வைத்துக் கொண்டு பிரசாரம் செய்தார்.
இதனால், கொளத்துார் தொகுதியில் வி.எஸ்.பாபு பிரசாரத்தில் கூட்டம் கூடியது. பலர், ‘டூப்’ விஜயுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில், கட்சித் தலைவரையே, ‘டூப்’ வைத்து பிரசாரம் செய்ய வேண்டிய நிலையில் த.வெ.க., உள்ளது என்று, சமூக வலைதளங்களில் தி.மு.க.,வினர் உள்ளிட்ட பல கட்சியினர், பலவாறு கிண்டலடித்து வருகின்றனர்.
வித்தியாசமாக யோசித்து மேற்கொண்ட முயற்சி, தமக்கே வினையானதை உணர்ந்த கொளத்துார் த.வெ.க.,வினர், ‘டூப்’ விஜயை கைகழுவி விட்டனர். சமூக வலைதளங்களில் பகிர்ந்த ‘டூப்’ விஜய் குறித்த படங்கள், வீடியோக்களையும் அழித்து விட்டனர்.
