கடந்த ஜுன் 23 ஆம் தேதி விஜய்யின் கடைசிப் படமாக கூறப்படும் ஜனநாயகன் வெளியான நிலையில், அன்றைய தினம் முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் விடுமுறை எடுத்து விட்டதாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்தன. அதோடு அன்றைய தினம் தவெக அமைச்சர்கள் FDFS காட்சியை பார்த்து விட்டு, திரையரங்குகளில் கண்ணீர் விடுவதை போன்ற வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்தன. இந்நிலையில் ஜனநாயகன் ரிலீஸை தொடர்ந்து நடந்த சம்பவங்கள் தொடர்பாக திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.
எழும்பூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான பரந்தாமன், திமுக மீது தவெகவினர் முன்வைக்கும் விமர்சனங்களுக்கு எல்லாம் பதிலடி கொடுத்து வருகிறார். இது தொடர்பாக அடிக்கடி செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்வுகளை அவர் நடத்தி வருகிறார். இதனிடையில் ஜனநாயகன் பட வெளியீட்டை தொடர்ந்து, முதல்வர் விடுமுறையில் இருந்ததாக பரந்தாமன் கடும் விமர்சனங்களை முன்வைத்து பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது, ஜனநாயகன் திரைப்படம் வியாழக்கிழமை வெளியீடு. வெள்ளிக்கிழமை முதல்வர் ஜோசப் விஜய் படம் பார்த்தார். சனிக்கிழமை பணி இல்லை. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் என ஒட்டுமொத்த தலைமைச் செயலகமே நான்கு நாட்கள் அறிவிக்கப்படாத விடுமுறை என கடுமையன குற்றச்சாட்டுகளை தன்னுடைய பதிவில் முன்வைத்துள்ளார்.
அதோடு நல்ல மாற்றம். வாழ்க ஜனநாயகம் எனவும் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார் பரந்தாமன். அவருடைய இந்த பதிவுக்கு ஏராளமான கமெண்ட்கள் குவிந்து வருவதை தொடர்ந்து விவாதங்கள் வெடித்துள்ளன. முன்னதாக ஜனநாயகன் படத்தினை விஜய் திரையரங்குகளில் பார்த்தது சம்பந்தமாக விமர்சனங்களை முன்வைத்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் தான் கூலி படம் பார்த்தார் என தவெகவினர் பதிலளித்தனர்.
இதனையடுத்து மாற்றம் வேண்டும் என்பதற்காக தான் உங்களை மக்கள் தேர்வு செய்தார்கள். தற்போது நீங்களும் அதே போன்று ஒரு தவறை செய்து, அதற்கு நியாயம் கற்பிப்பது சரியா என இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பினார்கள். மற்றொரு பக்கம் நீட் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டிய சமயத்தில், தவெகவினர் ஜனநாயகன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதும் கடுமையான விமர்சனங்களை கிளப்பியது. இது தொடர்பாக போராட்ட களத்திலே சிலரும் பேசினார்கள்.
அதிமுக ஐடி விங்கும் எங்களுக்கு ஜனநாயகன் வேண்டாம். ஜனநாயகம் வேண்டும் என விமர்சனங்களை முன்வைத்து பதிவிட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன், ஜனநாயகன் ரிலீசை முன்னிட்டு 4 நாட்களாக தலைமை செயலகமே அறிவிக்கப்படாத விடுமுறையில் இருப்பதாக கடும் விமர்சனங்களை முன்வைத்து பதிவிட்டு இருக்கிறார். அவரின் இந்த பதிவு தற்போது விவாதங்களை கிளப்பியுள்ளது.
இதற்கிடையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், முதல்வர் விஜய் ஜனநாயகன் பரிதாப நிலை கண்டு கவலையில் உள்ளார். இதனால் நான்கு நாட்களாக தலைமை செயலகத்தில் அவர் தலை காட்டவில்லை. ஜனநாயகன் படம் ஊத்திக்கிச்சுன்னு கவலையா? என கேலி செய்து பேசியிருந்தார். கடந்த நான்காம் தேதி ஜனநாயகன் வெளியான நிலையில், நான்கு நாட்களாக முதல்வர் தலைமை செயலகம் பக்கம் தலை காட்டவில்லை என கிண்டலடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
