ஜனவரியில் ரூ.14,000 கோடிக்கு இந்திய ஆடைகள் ஏற்றுமதி திடீர் ஏற்றத்தால் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி

திருப்பூர்: அமெரிக்காவுக்கான ஆடை ஏற்றுமதி துவங்கியுள்ளதால், கடந்த ஜனவரி மாதத்தில் ஆடை ஏற்றுமதி 14,026 கோடி ரூபாயை எட்டியதாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில், இறக்குமதி வரி உயர்வால், செப்., முதல் ஜன., மாதம் வரையிலான, அந்நாட்டுக்கான ஆடை ஏற்றுமதி குறைந்தது. அதேநேரம், மற்ற நாடுகளுக்கான ஏற்றுமதி அதிகரித்தது.

அமெரிக்க வர்த்தக வாய்ப்பை நழுவவிடாமல், இந்திய ஏற்றுமதியாளர்கள், இறக்குமதி வரி உயர்வு விவகாரத்தை தெளிவாக கையாண்டனர்.

Image 1537389

அமெரிக்க இறக்குமதியாளர்களுடன், கூடுதல் வரியை பகிர்ந்து கொண்டனர். விரைவில் வரி உயர்வுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், அமெரிக்காவுக்கு ஏற்றுமதியான ஆடைகளை, அந்நாட்டு துறைமுக சரக்கு முனையங்களில் இருப்பு வைத்தனர்.

வரி குறைப்புக்கு பிறகு, இருப்பு வைத்த ஆடைகள் அமெரிக்காவில் இறக்குமதியாகி வருகின்றன.

நம் நாட்டில் தேங்கிய ஆடைகள், டிச., மாதத்தில் இருந்து ஏற்றுமதியாக துவங்கிவிட்டன. இதனால், கடந்த மாதம், 14,026 கோடி ரூபாய்க்கு ஆடை ஏற்றுமதி நடந்துள்ளதாக, மத்திய வர்த்தகத்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் கூறுகையில், ”அமெரிக்காவுக்கு செல்லாமல் தேங்கிய ஆடைகள், இரண்டு மாதங்களாக சென்று கொண்டிருக்கின்றன. ரூபாய் மதிப்பில் கணக்கிடும் போது, ஜன., மாத ஏற்றுமதி இயல்பு நிலையை தாண்டி, முன்னேற்றம் அடைந்துள்ளது.

”இது, 2024 – 25ம் ஆண்டின் இதே காலகட்டத்தில், 1.08 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது; நடப்பாண்டின் மொத்த ஆடை ஏற்றுமதி, 1.40 லட்சம் கோடி ரூபாயை தாண்டும்,” என்றார்.

Source link