ஜன் விஷ்வாஸ் சட்டத்திருத்த மசோதா அறிமுகம்

புதுடில்லி: சிறு குற்றங்களை குற்றமற்றதாக்குவதுடன், சிறை தண்டனைக்கு பதிலாக அபராதங்கள் விதிக்கும், ஜன் விஷ்வாஸ் சட்டப்பிரிவுகளின் திருத்த மசோதா, 2026, லோக்சபாவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

பல்வேறு சட்டங்களின் கீழ் வரும் சிறிய குற்றங்களை, குற்றமற்றவையாக்குவதற்காக, ‘ஜன் விஷ்வாஸ் சட்டப் பிரிவுகள் திருத்த சட்டம்’ 2023ல் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது.

இதன்கீழ், 19 அமைச்சகங்கள் அல்லது துறைகளால் நிர்வகிக்கப்படும் 42 மத்திய சட்டங்களின் 183 பிரிவுகள் குற்றமற்றதாக மாற்றப்பட்டன. இந்த மசோதாவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, ஜன் விஷ்வாஸ் சட்டப்பிரிவுகள் திருத்த மசோதா, 2025 லோக்சபாவில் கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

திருத்தம்

இதன்படி, சிறிய தவறுகளுக்கு சிறைக்கு பதிலாக அபராதம் விதித்தல் அல்லது எச்சரித்தல், முதல்முறை குற்றங்களுக்கு எச்சரிக்கை விடுத்தல் போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டு, பார்லிமென்ட் தேர்வுக் குழு ஆய்வுக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.

ஜன் விஷ்வாஸ் திருத்த மசோதா குறித்து பல்வேறு அமைச்சகங்களுடன் ஆலோசனை நடத்திய தேர்வுக் குழு, கடந்த 13ல், இது தொடர்பான அறிக்கையை பார்லி.,யில் சமர்ப்பித்தது.

இதையடுத்து, அந்த மசோதாவில் மாற்றங்கள் செய்ய விரும்பிய மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பீயூஷ் கோயல், ஜன் விஷ்வாஸ் திருத்த மசோதா, 2025ஐ கடந்த 18ம் தேதி திரும்பப் பெற்றார்.

இந்நிலையில், ஜன் விஷ்வாஸ் சட்டப்பிரிவுகள் திருத்த மசோதா, 2026ஐ, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா லோக்சபாவில் நேற்று அறிமுகம் செய்தார்.

Image 1554780

அப்போது அமைச்சர் ஜிதின் பிரசாதா கூறியதாவது: திருத்தப்பட்ட மசோதா, 23 அமைச்சகங்களின் நிர்வாகத்தின் கீழ் வரும், 79 மத்திய சட்டங்களை திருத்த முன்மொழிகிறது. மொத்தமாக, 784 சட்டப்பிரிவுகளில் திருத்தங்கள் செய்ய முன்மொழியப்பட்டுள்ளன. இவற்றில், வணிகம் செய்வதை எளிதாக்கும் நோக்கில், 717 பிரிவுகள் குற்றமற்றவையாக மாற்றப்படுகின்றன. வாழ்வதை எளிதாக்கும் வகையில், 67 பிரிவுகளில் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

சீர்திருத்தம்

இந்த மசோதா, 57 சட்டப்பிரிவுகளில் சிறைத் தண்டனையையும், 158 சட்டப்பிரிவுகளில் அபராதத்தையும் நீக்க முன்மொழிகிறது.

மேலும், 17 சட்டப்பிரிவுகளில் சிறைத் தண்டனை காலத்தை குறைக்க முன்மொழியப்பட்டு உள்ளது; 113 சட்டப்பிரிவுகளில் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் ஆகியவை, வெறும் அபராதத் தொகையாக மாற்றப்பட முன்மொழியப்பட்டுள்ளது. பெரிய அளவிலான மீறல்களோ அல்லது தீவிரமான குற்றங்களோ எந்த வகையிலும் நீர்த்துப்போகச் செய்யப்படவில்லை.

மேலும், தேசிய பாதுகாப்பு, தொழிலாளர் நீதிமன்றங்கள், ஆயுதப் படைகள் மற்றும் சர்வதேச கடமைகள் தொடர்பான சட்டங்கள் போன்ற மிக முக்கியமான துறைகளைத் தவிர்த்துவிட்டு, கவனமாக வடிவமைக்கப்பட்டு, இந்தச் சீர்திருத்தச் செயல்முறை முன்னெடுக்கப்பட்டுள்ளது-. இவ்வாறு அவர் கூறினார்.

Source link