ஜன நாயகன் படத்தை கசியவிட்டது எடிட்டரா?

தவெக தலைவர் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ சிபிஎஃப்சி-யிடம் சிக்கி பெரும் பிரச்சனையை சந்தித்தது. படத் தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் சென்றும் பலன் கிடைக்கவில்லை. சிபிஎஃப்சி-யும் விடாமல் முட்டுக்கட்டை போட்டது. இறுதியில் படக்குழு வழக்கை வாபஸ் பெற்று மறு சான்றிதழுக்கு சிபிஎஃப்சி-யிடம் சமர்பித்தது. படம் பார்த்த சிபிஎஃப்சி தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என பரிந்துரைத்தது. ஆனால் அதன்பிறகு எந்த தகவலும் வெளியாகவில்லை. ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படம் தொடர் தாமதமாகி வந்ததால் வெளிநாட்டு உரிமை, ஓடிடி உரிமை என பல வியாபரங்கள் பாதிக்கப்பட்டது.

இந்த சூழலில் ஜன நாயகன் படத்தின் 5 நிமிட காட்சிகள் சமீபத்தில் இணையத்தில் கசிந்தது. பின்பு மொத்த படமும் வெளியானது. இதனால் படக்குழுவினரும் விஜய் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் அந்நிறுவனத்தின் சட்ட ஆலோசகர், விஜயன் சுப்ரமணியன் படத்தை கசிய விட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் படத்தை பதிவிறக்கம் செய்வதோ, அனுப்புவதோ, சேமிப்பதோ இதுபோன்று எது செய்தாலும் சட்டப்படி குற்றம் எனக்கூறி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். பின்பு படத் தயாரிப்பு நிறுவனமும் அதே எச்சரிக்கையோடு அறிவிக்கை வெளியிட்டது. இந்த சட்டவிரோதமான நடவடிக்கையை கண்டித்து பல திரைபிரபலங்கள், சங்கங்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து சிபிஎஃப்சி (மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம்) அளித்துள்ள விளக்கத்தில், தாங்கள் தான் படத்தை கசியவிட்டதாக கூறும் செய்தி முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் தவறானவை எனக் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக 6 பேரை தமிழ்நாடு சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். மேலும் மற்ற குற்றவாளிகளையும் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக ஆர்.கே.செல்வமணி தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் எடிட்டர் சங்க தலைவர்கோபி கலந்து கொண்டு பேசுகையில், “இந்த படம் இணையத்தில் கசிந்ததில் எங்களுடைய வருத்தம் மிகப்பெரியது. எங்களுக்கு வாய்ப்புகளே நம்பிக்கையின் அடிப்படையில் தான் கிடைக்கும். இந்த பட எடிட்டர் பிரதீப் 20 படங்களுக்கு மேல் எடிட்டராக பணியாற்றியிருக்கார். இந்த படத்தின் சிபிஎஃப்சி சான்றிதழ் தள்ளிப்போகும் போது இயக்குநர் வினோத் படத்தில் சிஜி காட்சிகள் சேர்க்கலாம் என்ற ஆசை இருந்தது. இது பொதுவாக எல்லா இயக்குநர்களுக்கும் வருவது தான். 

அப்படி எடிட் செய்வதற்காக சென்னையில் இருந்து ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்னா ஸ்டூடியோஸுக்கு இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரின் ஒப்புதலோடு அனுப்பப்பட்டது. கசியப்பட்ட காட்சிகளில் 14ஆம் தேதி ஒன்றாவது மாசம் எனக் குறிப்பிட்டிருப்பதை பலரும் கேள்வி கேட்டனர். 9ஆம் தேதி பட ரிலீஸாகாததால் சின்ன விஷயங்களை அப்டேட் செய்வதற்காக எடிட் செய்யப்பட்ட புது வெர்ஷன் தான் இணையத்தில் கசியவிடப்பட்டிருக்கு. மற்றபடி இந்த படத்தை எடிட்டர் கசிய விட்டிருப்பார் என சில தகவல் வருவது தவறானது. அவர் கசிய வேண்டும் என்று நினைத்திருந்தால் அந்த தேதி இல்லாத பிரிண்டையே வெளியிட்டிருக்கலாம். ஏன் தேதி குறிப்பிட்ட வெர்ஷனை கசியவிட்டு அவர் கரியரை இழக்க வேண்டும். அது அவருக்கு அவசியம் கிடையாது. இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது தெரியாது. அதே போல் கசியவிடப்பட்ட பிரிண்டில் எடிட்டர் ரெஃபெரன்ஸுகாக எனக் குறிப்பிடட்டிருக்கிறது. அப்படியென்றால் டிஐ(DI) பண்ணி அதில் இருந்து வர பிரிண்ட். அதை சர்பார்ப்பதற்காக எடிட்டருக்கு அனுப்புவார்கள். இது எல்லாமே நம்பிக்கையின் பேரில் தான் நடக்கிறது. அப்படி இருக்கும் போது அதை வெளியில் விட்டு யாரும் தங்களது தொழிலை கெடுத்துக்கொள்ள விரும்பமாட்டார்கள். அதனால் எடிட்டர் மேல் பழிபோடுவது தவறானது. வழக்கின் விசாரணை சரியான பாதையில் நடந்து கொண்டிருக்கிறது. குற்றம் செய்தவர்கள் யார் என்பதை விரைவில் போலீஸார் அறிவிப்பார்கள். அது வரையும் யாரும் அவர்களுடைய கருத்து திணிப்பை கொட்டாதீர்கள்” என்றார். 

Source link