தவெக தலைவர் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ சிபிஎஃப்சி-யிடம் சிக்கி பெரும் பிரச்சனையை சந்தித்தது. படத் தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் சென்றும் பலன் கிடைக்கவில்லை. சிபிஎஃப்சி-யும் விடாமல் முட்டுக்கட்டை போட்டது. இறுதியில் படக்குழு வழக்கை வாபஸ் பெற்று மறு சான்றிதழுக்கு சிபிஎஃப்சி-யிடம் சமர்பித்தது. படம் பார்த்த சிபிஎஃப்சி தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என பரிந்துரைத்தது. ஆனால் அதன்பிறகு எந்த தகவலும் வெளியாகவில்லை. ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவிருந்த படம் தொடர் தாமதமாகி வந்ததால் வெளிநாட்டு உரிமை, ஓடிடி உரிமை என பல வியாபரங்கள் பாதிக்கப்பட்டது.
இந்த சூழலில் நேற்று ஜன நாயகன் படத்தின் 5 நிமிட காட்சிகள் இணையத்தில் கசிந்தது. பின்பு இன்று மொத்த படமும் வெளியானது. இதனால் படக்குழுவினரும் விஜய் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் அந்நிறுவனத்தின் சட்ட ஆலோசகர், விஜயன் சுப்ரமணியன் படத்தை கசிய விட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் படத்தை பதிவிறக்கம் செய்வதோ, அனுப்புவதோ, சேமிப்பதோ இதுபோன்று எது செய்தாலும் சட்டப்படி குற்றம் எனக்கூறி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார்.
இந்த சட்டவிரோதமான நடவடிக்கையை கண்டித்து பல திரைபிரபலங்கள் தங்களது எக்ஸ் பக்கத்தில் குரல் கொடுத்து வருகின்றனர். தெலுங்கு மூத்த நடிகர் சிரஞ்சீவி, “ஜன நாயகன் படம் துரதிர்ஷ்டவசமாக இணையத்தில் கசிந்திருப்பது எனக்கு மிகுந்த கவலையளிக்கிறது. சினிமா என்பது நம்பிக்கை, கடும் உழைப்பு மற்றும் பலரின் கூட்டுக்கனவுகளின் அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்ட ஒன்று. இத்தகைய சம்பவங்கள் சினிமாவில் இருக்கும் அனைவரையும் பாதிக்கிறது. மேலும், நமது படங்களை பாதுகாப்பது எவ்வளவு இன்றியமையாதது என்பதை நினைவூட்டுகிறது. இச்சம்பவத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதிலும், குற்றவாளிகளைத் தண்டிப்பதிலும் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் நாம் உறுதுணையாக நிற்போம். சினிமாவை மதித்து, அதைப் பாதுகாத்திட நம் அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவு அளிப்போம். பைரசிகளை ஒழிப்போம். சினிமாவை காப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் ஆண்டனி, “ஜனநாயகன் படம் பைரசியால் பாதிக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. சட்டப்பூர்வமான தளங்களில் படம் வெளியாகும் போது, ​​அதற்கு அனைவரும் ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், “பைரசியை ஆதரிக்காதீர்கள். திறமையையும் கடின உழைப்பையும் மதியுங்கள். திரைப்பட உருவாக்கத்தில் எத்தனை ரத்தமும் வியர்வையும் சிந்தப்படுகிறது” என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால், “அன்புள்ள விஜய், உங்கள்/எங்கள் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் கசிந்த காட்சிகளை பார்ப்பது உண்மையிலேயே மன வருத்தத்தை அளிக்கிறது. எத்தனை முயற்சியும், அர்ப்பணிப்பும், உழைப்பும் வீணாகிப் போகிறது. கடந்த இருபது ஆண்டுகளாக உங்கள் ரசிகனாக, உங்கள் திரைப்படங்களைத் திரையரங்குகளில் பார்த்து, எனக்குப் பிடித்த கதாநாயகனுக்கு விசில் அடித்து மகிழ்ந்திருக்கிறேன்.
திரைப்படம் ஓடிடி மற்றும் சாட்டிலைட்டில் வெளியானால், அது நம் வீட்டுத் திரையரங்குகளில் நான்கு சுவர்களுக்குள் முடங்கிப் போகும் என்றாலும், இப்போதும் நம்மால் அதையே செய்ய முடிந்தால் நன்றாக இருக்கும். ஒரே வித்தியாசம், நம் வீடுகளில் நமக்கு பிடித்த நடிகருக்கு விசில் அடிப்பதுதான். இது தயாரிப்பு நிறுவனத்தால் எடுக்கப்பட்ட மிகவும் கடினமான, நிதி சார்ந்த மற்றும் முக்கியமான முடிவு என்று எனக்குத் தெரியும். ஆனால் ஒரு ரசிகனாக இதை வெளிப்படுத்த விரும்பினேன். திரைப்படம் விரைவில் திரையரங்குகளுக்கு வரும் என்று நம்புகிறேன். இது அவ்வளவு சர்ச்சைக்குரியது என்று நான் நினைக்கவில்லை, ஆனால் மரியாதைக்குரிய செண்ட்ரல் போர்ட் வாரியத்திற்கு அவர்களின் சொந்த காரணங்கள் இருக்கலாம். ஆனால் உங்கள் திரைப்படத்தை நாம் அனைவரும் விரைவில் சட்டப்பூர்வமாகப் பார்க்க முடியும் என்று நம்புகிறேன். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
