ஜம்மு:ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த இரு அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்து துணை நிலை

ஜம்மு:ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த இரு அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்து துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா உத்தரவிட்டார்.

ஜம்மு – காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் கல்வித்துறை ஊழியராக பணியாற்றியவர் பர்ஹத் அலி காண்டே. இவர் ஹிஜ்புல் முஜாஹிதின் பயங்கரவாத அமைப்பின் நெட்வார்க்கை அப்பகுதியில் உருவாக்கவும், பயங்கரவாத செயல்பாடுகளை அப்பகுதியில் புதுப்பிக்கவும் தன் அரசு பதவியை பயன்படுத்துவதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இதையடுத்து கடந்த 2011ல் பாதுகாப்பு முகமைகளின் கண்காணிப்புக்குள் காண்டே வந்தார். புலனாய்வு அமைப்புகள் நடத்திய விசாரணையில் பயங்கரவாதிகளின் குடும்பங்களுக்கு காண்டே பணம் சப்ளை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட காண்டே பின் ஜாமினில் வந்து மீண்டும் பயங்கரவாதிகளுடன் இணைந்து செயல்பட்டார். இதையடுத்து 2022ல் சிறப்பு நீதிமன்றத்தில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்று அவரை அரசு பதவியில் இருந்து நீக்கி துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா உத்தரவிட்டார்.

இதே போல் பந்திபோரா மாவட்டத்தில் ஊரக மேம்பாட்டுத்துறை ஊழியர் முகமது சபி தார், லஷ்கர் பயங்கரவாத அமைப்புடன் இணைந்து செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. விசாரணையில் பயங்கரவாதிகள் தங்க இடங்களை ஏற்பாடு செய்தல், பாதுகாப்பு படையினர் குறித்த முக்கிய தகவல்களை பரிமாறுதல், பயங்கரவாதிகள் இடப் பெயர்ச்சிக்கு உதவுதல் போன்ற செயல்களை செய்ததால் கடந்த ஆண்டு சபி தார் கைது செய்யப்பட்டார். பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்க உதவி செய்த சபி தாரையும் நேற்று பணி நீக்கம் செய்து துணை நிலை கவர்னர் உத்தரவிட்டார்.

அரசு நிறுவனங்களிலிருந்து பயங்கரவாத தொடர்புகளை முற்றிலும் ஒழிக்கும் சட்டப்பிரிவின் கீழ் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த 90 அரசு ஊழியர்கள் காஷ்மீரில் இதுவரை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source link