ஜம்மு: ஜம்மு – காஷ்மீர் இயற்கை வளத்தின் முக்கிய அங்கமாக விளங்கும் ஏரிகளின் எண்ணிக்கை கடந்த 57 ஆண்டுகளில் 74

ஜம்மு: ஜம்மு – காஷ்மீர் இயற்கை வளத்தின் முக்கிய அங்கமாக விளங்கும் ஏரிகளின் எண்ணிக்கை கடந்த 57 ஆண்டுகளில் 74 சதவீதம் அளவுக்கு முற்றிலுமாக மறைந்தும், சில நுாறு ஏரிகள் பரப்பளவில் சுருங்கியும் உள்ளதாக, சி.ஏ.ஜி., எனப்படும் தலைமை கணக்கு தணிக்கையாளரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டு கட்சி ஆட்சியில் உள்ளது. இங்கு உள்ள சட்டசபையில் சமீபத்தில் சி.ஏ.ஜி., அறிக்கை வெளியானது.

நிதி, பொருளாதாரம், வரிகள், தொழில் துறை, கல்வி, சுகாதாரம் ஆகிய தலைப்புகளில் 2024 – 25 மற்றும் 2025 – 26 நிதியாண்டுக்கான செயல்பாடுகள் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளன.

குடிநீர் பஞ்சம்

அதில், சுற்றுச்சூழல் தொடர்பாக சி.ஏ.ஜி., வெளியிட்ட அறிக்கையில், ஜம்மு – காஷ்மீரின் 20 மாவட்டங்களில் மொத்தம் 697 இயற்கையாக அமைந்த ஏரிகள் இருந்த நிலையில், அவற்றில் 315 ஏரிகள் காணாமல் போயுள்ளதாகவும், 203 ஏரிகளின் பரப்பு சுருங்கியுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

காஷ்மீர் சுற்றுச்சூழல் தொடர்பான சி.ஏ.ஜி., அறிக்கையில் மேலும் கூறப்பட்டு உள்ளதாவது:

கடந்த 1967ம் ஆண்டில் இருந்து 2024ம் ஆண்டு வரையிலான 57 ஆண்டுகளில், ஜம்மு – காஷ்மீரில் மொத்தம் உள்ள 697 இயற்கை ஏரிகளில் 74 சதவீதத்திற்கும் அதிகமானவை முற்றிலும் மறைந்தோ அல்லது பரப்பளவு குறைந்தோ உள்ளன.

இதில், 3,800 ஏக்கர் பரப்பிலான 315 ஏரிகள் முழுமையாக காணாமல் போயுள்ளன. 203 ஏரிகளின் பரப்பு 3,200 ஏக்கர் அளவுக்கு சுருங்கிஉள்ளன.

இது, தாவர மற்றும் விலங்கினங்கள், நீர் வளம், உணவு உற்பத்தி மற்றும் உயிரியல் சமநிலைக்கு நேரடி பாதிப்பை உண்டாக்கி உள்ளன. ஏரிகள் பரப்பு குறைந்ததால் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இது மேலும் தீவிரமடையலாம்.

நகரம் மற்றும் கிராமங்களில் உள்ள ஏரிகள் இயற்கை வெள்ளத் தடுப்புகளாக செயல்படுவதால், மழைக்காலங்களில் அதிகமான நீரை தாங்கி அந்தந்த பகுதிகளை பாதுகாக்கின்றன.

அவற்றின் பரப் பளவு ஆண்டுக்கு ஆண்டு குறைந்ததன் காரணமாக, 2014ம் ஆண்டில் ஜம்மு – காஷ்மீரில் ஏற்பட்ட பெருவெள்ளம் பேரழிவு தாக்கத்தை அதிகரித்தது.

பற்றாக்குறை

நிர்வாக குறைபாடுகள் காரணமாக ஏரிகள் காணாமல் போவது அதிகரித்துள்ளது. ஏரிகள் பாதுகாப்பிற்கு தனியான சட்ட அமைப்போ அல்லது மையப்படுத்தப்பட்ட அதிகார அமைப்போ இல்லை.

ஏரிகள் பாதுகாப்பு தொடர்பான பொறுப்பு வனத்துறை, வருவாய், வேளாண்மை, நகர வளர்ச்சி, சுற்றுலா உள்ளிட்ட ஐந்து துறைகளுக்கு இடையில் சிதறி காணப்படுகின்றன.

கடந்த, 1989ம் ஆண்டிலேயே காஷ்மீரில் உள்ள ஏரிகள் குறித்து விரிவான ஆய்வு நடத்த உத்தரவு வழங்கப்பட்டிருந்தாலும், தொழில்நுட்ப மற்றும் மனிதவள பற்றாக்குறையால் அது மேற்கொள்ளப்படவில்லை.

மொத்தம் இருந்த 697 ஏரிகளில் பிரபலமான தால் ஏரி, வுலார் உள்ளிட்ட ஆறு ஏரிகளுக்கு மட்டுமே பாதுகாப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள ஏரிகளுக்கு எந்த திட்டமும் உருவாக்கப்படாதது கவலைக்குரியது.

கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்புகள் மக்கள் தொகைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படாதது, கண்காணிப்பு குறைபாடு மற்றும் நகர வளர்ச்சியில் ஒருங்கிணைந்த திட்டமின்மை ஆகியவை ஏரிகள் சீரழிவிற்கு முக்கிய காரணங்கள்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source link