ஜம்மு: ‘பரூக் அப்துல்லாவை கொலை செய்ய 20 ஆண்டுகளாக முயன்றேன்’ என, அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கைதான நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஜம்மு – காஷ்மீரில் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில், தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சி அமைந்துள்ளது.
முதல்வர் ஒமரின் தந்தை பரூக் அப்துல்லா, ஜம்மு – காஷ்மீரின் முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் ஏற்கனவே பதவி வகித்துள்ளார்.
இவரும், தற்போதைய துணை முதல்வர் சுரிந்தர் சவுத்ரியும், ஜம்முவின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் நடந்த கட்சி பிரமுகரின் இல்ல திருமண விழாவில் நேற்று முன்தினம் இரவு பங்கேற்றனர்.
விழாவில், முதல்வர் ஒமர் அப்துல்லாவின் ஆலோசகர் நசீர் அஸ்லாம் வனி, தேசிய மாநாட்டுக் கட்சி எம்.எல்.ஏ., அய்ஜாஸ் ஜன் மற்றும் அக்கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி முடிந்து அனைவரும் புறப்பட்ட போது, அவர்களின் பின்னால் இருந்து வந்த நபர் ஒருவர் திடீரென பரூக் அப்துல்லா கழுத்தின் பின்னால் துப்பாக்கியை வைத்து சுட முயன்றார்.
இதையடுத்து சுதாரித்த, என்.எஸ்.ஜி., எனப்படும் தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் அந்த நபரின் கைகளை தட்டிவிட்டனர்.
இதில், துப்பாக்கி குண்டு மேல்நோக்கி சீறிப்பாய்ந்து வெடித்தது. இந்த சம்பவத்தில் நுாலிழையில் பரூக் அப்துல்லா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இருப்பினும், உடனிருந்த சுரிந்தர் சவுத்ரிக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை, பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.
அவரிடம் இருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. மது போதையில் இருந்த அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் ஜம்முவின் புரானி மந்தியைச் சேர்ந்த கமல்சிங் ஜம்வால், 63, என்பது தெரியவந்தது.
விசாரணையின் போது, கைதான நபர் போலீசாரிடம் கூறுகையில், ‘பரூக் அப்துல்லாவை, கொல்ல 20 ஆண்டுகளாக நான் காத்திருந்தேன். இந்த திருமண விழாவுக்கு எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
‘ இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, என்னிடம் இருந்த உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியால் அவரை சுட முயன்றேன். ஆனால், தப்பிவிட்டார்’ என கூறியுள்ளார்.
கொல்ல முயன்றதற்கு தனிப்பட்ட விரோதமே காரணம் என அவர் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.
பட்டாசு வெடித்ததாகவே நினைத்தேன்
திருமண விழாவில் இருந்து புறப்பட்ட போது, என் பின்னால் பட்டாசு வெடித்தது போன்ற சத்தம் கேட்டது. உடனடியாக, பாதுகாப்பு வீரர்கள் என்னை காருக்கு அழைத்து சென்றனர். அங்குதான் அவர்கள் நடந்த விபரத்தை தெரிவித்தனர். அதன் பின்னரே, எனக்கு பின்னால் வந்த நபர் ஒருவர் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது. அவர் யார் என்று தெரியவில்லை. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறித்த விபரங்களை என்னிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்தார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். –பரூக் அப்துல்லா, தலைவர், தேசிய மாநாட்டு கட்சி
