ரத்த உறவுகளோ, உயிர் நண்பர்களோ நிதி நெருக்கடியில் நின்று ஜாமின் கையெழுத்து கேட்கும்போது, நம்மால் ‘இல்லை’ என்று சொல்ல முடிவதில்லை. அதே நேரம், கடன் வாங்கியவர் தலைமறைவானாலோ அல்லது கடன் தவணையை செலுத்தாமல் விட்டாலோ ஜாமின்தாரர்தான் அந்த கடனுக்கான முழு பொறுப்பு.
ஜாமின் கையெழுத்திடுபவர் என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும், எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தனியார் வங்கி அதிகாரி மணியன் கலியமூர்த்தி கூறியதாவது:
கடன் வாங்கியவர் தலைமறைவாகிவிடும் சூழல் மிகவும் சிக்கலானது என்றாலும், சட்டப்பூர்வமாக ஜாமின்தாரர் தங்களை பாதுகாத்துக்கொள்ளவும், அந்த பொறுப்பிலிருந்து விடுபடவும் சில வழிகள் உள்ளன.
தொடர் உத்தரவாதம்: ஜாமின் ஒப்பந்தத்தில் ‘தொடர்ச்சியான உத்தரவாதம்’ என்கிற விதிமுறை இருப்பின், அதில் கையெழுத்து போடாமல் இருப்பது நல்லது. இது எதிர்காலத்தில் அவர் வாங்கும் கூடுதல் கடன்களுக்கும் ஜமீன்தாரரை பொறுப்பாக்கிவிடும். அல்லது ஒரு குறிப்பிட்ட கடன் பரிவர்த்தனைக்கு மட்டுமே நான் பொறுப்பு என்பதை குறிப்பிட்டு, கையெழுத்திடுங்கள்
ஜாமின் ரத்து: ஜாமின்தாரரின் அனுமதி இல்லாமல் வங்கியும் கடன் வாங்கியவரும் வட்டி விகிதத்தையோ அல்லது காலத்தையோ மாற்றினால், சட்டப்படி ஜாமின்தாரரின் பொறுப்பு ரத்தாக வாய்ப்புள்ளது
உடன்படிக்கை பத்திரம்: கடன் எடுத்தவருக்கு ஏற்கெனவே ஏதாவது ‘லைப் இன்சூரன்ஸ்’ பாலிசி இருப்பின், ஜாமின் கையெழுத்து போட்டவுடன் அந்த பாலிசியை வினியோகம் செய்த நிறுவனத்தை அணுகி, “நான் இவ்வளவு கடன் வாங்கியிருக்கிறேன். அதற்கு இவர் ஜாமின் கையெழுத்து போட்டிருக்கிறார்.
”கடன் கட்டி முடிக்கும் காலத்திற்குள், எனக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் இந்த இன்சூரன்ஸில் இருந்து கடனுக்கான பணத்தை கழித்து கொண்டு, மீதமுள்ள தொகையை இவர் என் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பார்.
இதற்கு இவருக்கு முழு உரிமை உண்டு” என கடன்தாரர் ஒரு ‘உடன்படிக்கை பத்திரம்’ எழுதி, அதில் ஜாமின்தாரரின் ஒப்புதல் கையெழுத்துடன் இன் சூ ரன்ஸ் நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். கடன் வாங்கியவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறும்போது, இன் சூ ரன்ஸ் பணத்தை வைத்து ஜாமின்தாரர் கடனை அடைத்து கொள்ளலாம்.
டி.ஓ., பார்ம்: வாகன கடன், போன்ற அசையும் சொத்துகள் வாங்குவதற்காக எடுக்கப்பட்ட கடனுக்கு ஜாமின் போட்டிருந்தால், கடன்தாரரிடம் கடனுக்கு அடமானம் வைக்காத அசையும் சொத்து ஏதேனும் இருப்பின், அதை 20 ரூபாய் பத்திரத்தில் குறிப்பிட்டு ‘டி.ஓ., பார்ம்’ என்று சொல்லப்படுகிற ‘உரிமையை மாற்றுதல்’ படிவத்தில் கையெழுத்து வாங்கி அந்த பத்திரத்துடன் இணைத்து வைத்து கொள்ள வேண்டும்.
அசையும் சொத்து சம்மந்தப்பட்ட ஆவணங்களின் நகலையும் வாங்கி வைத்துக் கொள்வது அவசியம். கடன்தாரர் முறையாக கடனை திருப்பி செலுத்தாத பட்சத்தில், மீதமுள்ள கடன் தொகையை ஜாமின்தாரர் கட்டிவிட்டு அசையும் சொத்தை சொந்தமாக்கி கொள்ளலாம்
சொத்து உரிமை: அசையா சொத்து வாங்குவதற்கான கடனுக்கு ஜாமின் போட்டிருந்தால், சம்பமந்தப்பட்ட இருவரும் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்று கடன் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய ஆவணத்தை தயாரித்து, கடனுக்கான காலத்தையும் குறிப்பிட்டு, ‘குறிப்பிட்ட காலத்துக்குள் கடனை அவர் முறையாக செலுத்தவில்லை என்றால் நான் அந்த கடனை செலுத்துகிறே ன்.
ஆனால், அவர் வாங்கிய சொத்தின் மீது எனக்கு மட்டுமே உரிமை உண்டு’ என எழுதி அதை முறைப்படி பதிவு செய்ய வேண்டும். இதற்கான மொத்த செலவும் கடன்தாரர்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை கருத்தில் கொள்க. இப்படி செய்திருந்தால், கடன்தாரர் தலைமறைவாகும் பட்சத்தில் ஜாமின்தாரர் மீதமுள்ள கடனை கட்டிவிட்டு, அந்த அசையா சொத்தை சொந்தமாக்கி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
