திமுக விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கைது செய்யப்பட்டார். முதல்வர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக கூறி அவர் கைதான நிலையில், நீதிமன்ற காவலில் பாளையங்கோட்டை சிறையில் மார்க்கண்டேயன் அடைக்கப்பட்டார். இதனையடுத்து இன்றைய தினம் அவர் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மார்க்கண்டேயன் தொண்டர்களிடம் பேசியுள்ளது கவனம் ஈர்த்து வருகிறது.
விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏவான மார்க்கண்டேயன், கோவில்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜோசப் விஜய்யை மிரட்டும் தொனியில் பேசியதாக தவெக நிர்வாகிகள் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக திடீரென அவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து கிட்டத்தட்ட பத்து மணி நேரத்திற்கு மேலாக அவரிடம் போலீசார் விசாரணை செய்தார். அப்போது மார்க்கண்டேயனை சந்திக்க முயன்ற அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் ஆகியோருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இதற்கு திமுகவினர் கடுமையான கண்டனம் தெரிவித்து எதிர்ப்புகளை பதிவு செய்தனர். இந்நிலையில் மருத்துவ பரிசோதனைக்கு பின்பாக மார்க்கண்டேயன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதனையடுத்து பாளையங்கோட்டை சிறையில் மார்க்கண்டேயன் அடைக்கப்பட்ட நிலையில், அவரை வெளியில் எடுப்பதற்கு திமுகவினர் தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி நீதிமன்றத்தில் மார்க்கண்டேயனை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுக்க காவல்துறையினர் அளித்த மனு விசாரணைக்கு வந்தது. அதோடு அவருடைய தரப்பில் இருந்தும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இதற்காக நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், இந்த இரண்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மார்க்கண்டேயனை மீண்டும் பாளையங்கோட்டை சிறையில் அடைப்பதற்கு போலீசார் அழைத்து சென்றனர்.
இந்நிலையில் போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்ட பிறகு தொண்டர்களிடம் பேசிய அவர், எவ்ளோ நாள் உள்ள இருக்கோமோ, அவ்ளோ வேகமா ஆட்சிக்கு வர்றோம். அதனால் உள்ளே இருக்கிறது நமக்கு பிரச்சனை இல்லை. ஒண்ணும் கவலைப்பட வேண்டாம் என்றார். அதோடு சோகமாக இருந்தவர்களிடம் ஹேப்பியா இருங்க. எல்லாம் நல்லாத்தான் இருக்கு எனவும் மிகுந்த நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் பேசினார் மார்க்கண்டேயன். அவர் பேசியதை கேட்டு தொண்டர்கள் சரி அண்ணே என மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இது சம்பந்தமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெருமளவில் கவனம் பெற்று வருகிறது. இதற்கிடையில் நேற்றைய தினம் திமுக துணை பொதுச்செயலாளர் எம்பி கனிமொழி, மார்க்கண்டேயனை நேரில் பார்ப்பதற்காக பாளையங்கோட்டை சிறைச்சாலைக்கு வருகை தந்தார். அவருடன் தூத்துக்குடியை சார்ந்த திமுக முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் ஆகியோரும் வந்திருந்தார்கள்.
இந்நிலையில் எம்எல்ஏவை சந்தித்ததற்கு பின்பாக மார்க்கண்டேயன் நலமுடன் இருப்பதாக கனிமொழி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதோடு இந்த சிறைச்சாலையில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றதற்காக கலைஞர் கருணாநிதி அடைக்கப்பட்டு இருந்தார். இதன் காரணமாக இந்த சிறைச்சாலையில் அடைப்பதை திமுகவினர் பெருமையாக கருதுவார்கள். இது மாதிரியான கைது, சிறையை பார்த்து அஞ்சுபவர்கள் திமுகவை சார்ந்தவர்கள் கிடையாது எனவும் கனிமொழி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
