புதுடில்லி: ‘ஜியோ’ நிறுவனம் பாரபட்சமான கட்டண திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என ‘டிராய்’ எனும் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஏப்., 14க்குள், அனைத்து தளங்களிலும் ஒரே மாதிரியான திட்டங்களை வெளியிடவும் அறிவுறுத்தியுள்ளது. தினசரி 1 ஜி.பி., டேட்டா திட்டம், ஜியோ செயலியில் மட்டுமே வழங்கப்படுவதாகவும், குறைந்த கட்டண திட்டங்கள் ஜியோ ஸ்டோர்களில் ரீசார்ஜ் செய்ய வலியுறுத்தப்படுவதாகவும் ஜியோ மீது கடந்த ஆண்டில் புகார் எழுந்தது.
அதற்கு பதிலளித்த ஜியோ, ‘நாங்கள் விதிகளை மீறவில்லை. 2020ம் ஆண்டு விதிமுறைகள், கட்டண விபரங்களை வெளியிட வேண்டும் என்றுதான் கூறுகின்றனவே தவிர, அவற்றை எங்கே விற்க வேண்டும் என்று சொல்லவில்லை என்று கூறியது.
புகாரை விசாரித்த டிராய், நிறுவனத்தின் 249 ரூபாய், 199 ரூபாய் திட்டங்கள், ஜியோ ஸ்டோர்களில் மட்டுமே கிடைக்கிறது. 209 ரூபாய் திட்டத்தை பயன்படுத்த, ‘மை ஜியோ’ ஆப் பயன்படுத்த வேண்டும்; மேலும், ‘ஜியோ போன்’, ‘ஜியோ பாரத்’ போன்களில் வழங்கப்படும் குறைந்த விலை திட்டங்கள், அதன் சிம் கார்டை மற்ற போன்களில் பயன்படுத்தினால் கிடைப்பதில்லை என தெரிய வந்ததாக தெரிவித்துள்ளது.
இது ‘பாரபட்சமான செயல் எனவும், வெளிப்படைத்தன்மையற்ற செயல் என்றும் கூறியுள்ள டிராய், வரும் 14ம் தேதிக்குள் இதை சரிசெய்ய ரிலையன்ஸ் ஜியோவுக்கு கெடு விதித்துள்ளது.
தனது உத்தரவுக்கு இணங்காவிட்டால் டிராய் சட்டம் 1997-ன் கீழ் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
