ஜி.கே.மணியின் மகனுக்கு வாய்ப்பு வழங்கிய காங்கிரஸ்; கட்சியில் இணைந்த 1 வாரத்திலேயே ஆஃபர்!

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், திமுகவிடம் பல்வேறு இழுபறிக்கு பின்பு முதல் ஆளாக 28 தொகுதிகளை வாங்கிய காங்கிரஸ், வேட்பாளர் பட்டியலை வெளியிடாமலேயே காலம் தாழ்த்தி வந்தது. எந்த தொகுதிகள் என முடிவான பின்னும், அந்த தொகுதிகளில் யாரை வேட்பாளர்களை நிறுத்துவது என கட்சிக்குள்ளேயே குழப்பம் நீடித்து வந்தது.

இதனிடையே, கட்சிக்குள் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், விற்பனை அணுகுமுறையோடு வேட்பாளர் தேர்வு நடக்கிறது என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இது காங்கிரஸிற்குள் நடக்கும் குழப்பத்தை வெளிச்சம் போட்டு காட்டியது. இந்த சூழலில், வேட்பாளர்களை தேர்வு செய்ய காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பல்வேறு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது.

வேட்புமனு செய்ய சனி (04-04-26), திங்கள் (06-04-26) ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள இந்த பரபரப்பான சூழலில், இன்று (03-04-26) முதற்கட்டமாக 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அதில், பென்னாகரம் தொகுதியில் போட்டியிட பா.ம.கவின் மூத்த தலைவரான ஜி.கே.மணியின் மகனும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான ஜி.கே.தமிழ்குமரனுக்கு காங்கிரஸ் வாய்ப்பு அளித்துள்ளது.

பா.ம.கவில் ராமதாஸ் – அன்புமணி இடையிலான மோதலுக்குப் பிறகு, பா.ம.கவில் ஓரங்கப்பட்ட ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரனை மீண்டும் கட்சியில் இணைத்து பா.ம.க மாநில இளைஞர் சங்கத் தலைவர் பதவியை ராமதாஸ் வழங்கினார். பா.ம.கவில் பொறுப்பு வழங்கியப் பிறகு, எந்தவித கட்சிப் பணியையும் தமிழ்குமரன் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, கடந்த மார்ச் 28ஆம் தேதி டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரைச் சந்தித்து அவர்களின் முன்னிலையில் தமிழ்க்குமரன் காங்கிரஸில் இணைந்தார். அதனை தொடர்ந்து, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகக் தமிழ்க்குமரனை பா.ம.கவில் இருந்து ராமதாஸ் நீக்கினார். இந்த சூழலில், காங்கிரஸில் இணைந்த 5 நாட்களிலேயே சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தமிழ்க்குமரனுக்கு காங்கிரஸ் வாய்ப்பு அளித்துள்ளது. 

Source link