பாமகவில் கட்சியின் நிறுவனர் ராமதாஸூக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில், ராமதாஸ் அணி மற்றும் அன்புமணி அணி என இரு அணிகளாகப் பிரிந்து, இருவேறு துருவங்களாகச் செயல்பட்டுத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த சூழ்நிலையில், பா.ம.கவின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏவுமான ஜி.கே.மணியின் மகனும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் நேற்று டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார். அன்புமணி உடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கட்சியில் இருந்து ஓரங்கப்பட்ட தமிழ்க்குமரனை மீண்டும் பா.ம.கவில் இணைத்து பா.ம.க மாநில இளைஞர் சங்கத் தலைவர் பதவியை ராமதாஸ் வழங்கினார். இந்த சூழ்நிலையில் அவர் காங்கிரஸில் இணைந்தார். இது பா.ம.கவினுரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் தமிழ்க்குமரனை பா.ம.கவில் இருந்து ராமதாஸ் நீக்கியுள்ளார். இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் சங்கத் தலைவராக ஐந்து மாதத்திற்கு முன் நியமனம் செய்யப்பட்ட தர்மபுரி மாவட்டத்தைச் சார்ந்த ஜி.கே.எம் தமிழ்குமரன் மேற்கண்ட பொறுப்பு வழங்கியதிலிருந்து எந்தவித கட்சிப் பணியையும் செய்யாமலும் அவருக்கு ஒதுக்கப்பட்ட இளைஞர் சங்க பொறுப்புகளில் ஆர்வம் காட்டாமல், ஈடுபடாமல் இருந்து வந்த காரணத்தாலும், தற்சமயம் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவருக்கு வழங்கப்பட்ட பொறுப்பைக் கொண்டு கட்சியின் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாலும் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து இன்று (27.03.2026 ) முதல் நீக்கப்படுகிறார் இவரோடு கட்சித் தொண்டர்களும் பொறுப்பாளர்களும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
