புதுடெல்லி: சக்திவாய்ந்த ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கர் நேற்று பிரான்ஸ் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார். மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிப்பது மற்றும் சர்வதேச வர்த்தகத்துக்கான கடல்சார் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை எவ்விதத் தடையுமின்றி இயக்குவது குறித்து இந்த மாநாட்டில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
இந்த சக்தி வாய்ந்த ஜி7 கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக இல்லாதபோதிலும், தற்போதைய தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் பிரான்ஸ் நாட்டின் அழைப்பின் பேரில் ‘கூட்டணி நாடு’ என்ற அந்தஸ்தில் இந்தியா அதில் பங்கேற்கிறது. அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.
