ஜீரோ பேலன்ஸ்: கடன் பத்திர முதலீட்டுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்

முதலீடு என்றாலே இன்று பலரும் பங்குச்சந்தை, தங்கம், வெள்ளி, நிலம் ஆகியவற்றுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆனால், ஓர் ஆரோக்கியமான போர்ட்போலியோவில், கடன் பத்திரங்களுக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், முதலீடுகளுக்கு அது தான் வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கிறது.

இப்போது நடப்பதையே பாருங்களேன். கடந்த 18 மாதங்களாக, நம் இந்திய பங்குச் சந்தைகள், முதலீட்டாளர்களுக்கு பெரிய லாபம் எதையும் தரவில்லை. அவர்களுடைய கவனம் மெல்ல மெல்ல கடன் பத்திரங்கள் பக்கம் திரும்புகிறது.

இத்தகைய முதலீடுகளில் பணத்தை போட்டிருந்தால், சற்றே கூடுதலான லாபத்தை பெற்றிருக்கலாமோ, வாய்ப்பை ‘மிஸ்’ பண்ணிவிட்டோமோ என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

இத்தகைய முதலீட்டாளர்களே, தங்கள் முதலீடுகளில் ஒரு பகுதியை கடன் பத்திரங்கள் சார்ந்த முதலீடுகளில் போட்டு வைத்திருந்தால், பங்குச் சந்தையில் நிலவும் தேக்க நிலையிலும், இவர்களது போர்ட்போலியோ பளிச்சென்று ஒளி வீசியிருக்கும். இங்கே கடன் இனங்கள் லாபத்தை ஈட்டி கொடுத்து, வருமானத்தை குறைந்தபட்சம் சமநிலைப்படுத்தியிருக்கும் அல்லது சற்றே கூடுதல் லாபத்தை ஈட்டி கொடுத்திருக்கும்.

எவ்வளவு போடுவது?

கடன் சார்ந்த இனங்களில் முதலீடு செய்வதற்கு ஏதேனும் வழிகாட்டி விதிமுறைகள் உள்ளனவா? அந்தக் காலத்தில் ஒரு வழிமுறை சொல்லப்படும். 100ல் உங்கள் வயதைக் கழித்தால் வருவதை பங்குச் சந்தையிலும், மீதமுள்ளதை கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்ய வேண்டும் என்பர்.

அதாவது உங்களுக்கு 30 வயது என்றால், 100 மைனஸ் 30, 70 வரும். இந்த 70 சதவீத அளவுக்குப் பங்குச் சந்தையிலும், மீதமுள்ள 30 சதவீத அளவுக்கு மட்டுமே கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்வது உசிதம் என்று சொல்லப்படுவது உண்டு.

கடந்த இருபது ஆண்டுகளில் இத்தகைய கணக்குகள் செல்லுபடியாவதில்லை. தேவைகளும் சூழ்நிலைகளும் மாறியுள்ளன. இந்நிலையில், அரசு ஓய்வூதியர்கள், தங்களுடைய முதலீடுகளில் 20 சதவீதத்தை கடன் சார்ந்த முதலீட்டு இனங்களில் வைத்துக்கொள்ள வேண்டும்.

மற்றவர்கள், பணக்காரர்களோ, மத்தியமர்களோ, குறைந்தபட்சம் 35 முதல் 40 சதவீத சேமிப்புகளை, கடன் சார்ந்த இனங்களில் வைத்துக்கொள்வதே சிறந்தது. பங்குகளையும், அது சார்ந்த மியூச்சுவல் பண்டு முதலீடுகளையும் எப்படி மெல்ல மெல்ல கட்டி எழுப்புகிறோமோ, அதேபோன்று தான் கடன் சார்ந்த முதலீடுகளையும் படிப்படியாக உயர்த்த வேண்டும்.

சொல்லப் போனால், உங்கள் முதல் சேமிப்பில் இருந்தே கடன் சார்ந்த இனங்களுக்கு என்று ஒரு பகுதி ஒதுக்கப்பட வேண்டும்.

எதில் போடுவது?

கடன் சார்ந்த பல முதலீட்டு இனங்கள் உள்ளன. உங்கள் தேவைகளை ஒட்டி, இதில் பிரித்து முதலீடு செய்ய வேண்டும். ஆறு மாதங்களுக்கான வீட்டு வாடகை, மளிகை, பால், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளுக்கான மொத்த தொகையை, வங்கி கணக்கில் சேமித்து வைக்க வேண்டும். இதற்குத் தான் ‘அவசர நிதித் தொகுப்பு’ என்று பெயர்.

ஆறு மாதங்கள் முதல் 12 மாதங்கள் தேவைப்படும் தொகையை, மனிமார்க்கெட் பண்டுகள் அல்லது லிக்விட் பண்டுகளில் போட்டு வைக்க வேண்டும். 12 மாதங்கள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை தேவைப்படும் தொகையை, வங்கி மற்றும் பி.எஸ்.யூ., கடன் பத்திர பண்டுகளில் முதலீடு செய்து வைக்க வேண்டும்.

ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தேவைப்படும் தொகையை மத்திய – மாநில அரசுகளின் கடன் பத்திரங்கள் மற்றும் நிலையான வட்டி விகிதம் கொண்ட பத்திரங்களில் முதலீடு செய்யும் ‘கில்ட்’ பண்டுகளில் போட்டு வைக்க வேண்டும்.

கவன சிதறல்

கடன் பத்திர முதலீடு செய்யும்போது, பலவிதமான கவனச் சிதறல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அவற்றை கவனமுடன் தவிர்க்க வேண்டும்.

கடன் பத்திர பண்டுகளைத் தேர்வு செய்யும்போது, அந்த பண்டுகள், எத்தகைய பத்திரங்களில் முதலீடு செய்கின்றன என்று கவனிக்க வேண்டும். அரசு வெளியிடும் ‘டிரிப்பிள் ஏ’ மதிப்பீடு கொண்ட பத்திரங்கள் தான் மிகச் சிறந்தவை. அவை அதிக வருவாய் ஈட்டித் தராமல் இருக்கலாம். ஆனால், உறுதியான பாதுகாப்பே அதன் வலிமை. வருவாய்க்கு ஆசைப்பட்டு, குறைந்த மதிப்புள்ள பத்திரங்களில் முதலீடு செய்யும் பண்டுகளைத் தேர்வு செய்துவிடாதீர்கள்.

பலரும் செய்யும் இன்னொரு தவறு, நேரடி கடன் பத்திர பண்டுகளில் முதலீடு செய்யாமல், கலப்பு பண்டுகள் என்று சொல்லப்படும் ‘ஹைப்ரிட் பண்டுகளில்’ முதலீடு செய்வர். இத்தகைய பண்டுகள் பங்குச் சந்தையிலும் முதலீடு செய்யும், கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யும். கடன் இனங்களின் வாயிலாக நாம் எதிர்பார்க்கும் முழுப் பாதுகாப்பை இத்தகைய பண்டுகள் தராது.

இன்னொரு பெரிய படுகுழி உண்டு. பங்குச் சந்தை மிக நல்ல வருவாய் ஈட்டித் தரும்போது, மனசு படபடக்கும். கடன் பத்திரங்களில் போடுவதை விட, பங்குச் சந்தையில் போட்டால் கூடுதல் லாபம் பார்க்கலாமே, எதற்கு முதலீட்டை ‘வேஸ்ட்’ செய்ய வேண்டும் என்று மனம் ஊசலாடும். உடனே கடன் சார்ந்த முதலீடுகளை எடுத்து, பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளுக்கு மாற்றுவோர் உண்டு.

இந்த எண்ணத்தை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். பாதுகாப்பான முதலீடுகளுக்கும் ரிஸ்க்கான முதலீடுகளுக்கும் இடையிலான வித்தியாசத்தைப் புரிந்துகொண்டு, அதற்குண்டான இடத்தை ஒவ்வொன்றுக்கும் கொடுக்க வேண்டும்.

ஆலோசனை

இது கொஞ்சம் நீண்ட கால ஆலோசனை. அதாவது, உங்களது வருடாந்திர செலவு எவ்வளவோ, அதுபோல் 15 ஆண்டுகளுக்கான செலவுகளுக்கு உண்டான மொத்த தொகையை கடன் சார்ந்த இனங்களில் வைத்திருப்பது மிகவும் பாதுகாப்பானது.

பங்குச் சந்தைகளில் பல ஆண்டுகள் வளர்ச்சியே இல்லாமல் இருக்கலாம், அல்லது ஒருசில ஆண்டுகளில் நஷ்டம் கூட ஏற்படலாம். ஆனால், கடன் சார்ந்த முதலீட்டு இனங்கள் சீரானவை. அதிக ஏற்ற இறக்கம் இல்லாதவை. அதனால், இத்தகைய அணுகுமுறை தேவை.Image 1542863

Source link