யுபியா: இந்தியா வந்துள்ள தஜிகிஸ்தான், பூடான் அணிகள் முத்தரப்பு நட்பு கால்பந்து தொடரில் (23 வயதுக்குட்பட்ட) பங்கேற்றன. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள, யுபியா ‘கோல்டன் ஜூப்ளி’ மைதானத்தில் போட்டிகள் நடந்தன. முதல் போட்டியில் தஜிகிஸ்தான் 1-0 என பூடானை வென்றது. அடுத்து இந்திய அணி 5-0 என பூடானை வீழ்த்தியது.
நேற்று நடந்த கடைசி போட்டியில் இந்தியா, தஜிகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 9 வது நிமிடத்தில் தஜிகிஸ்தான் வீரர் ஹைதோவ் அஜிஸ்பெக் ஒரு கோல் அடித்தார். இந்திய அணி தரப்பில் கடைசி வரை முயற்சித்தும், ஒரு கோல் கூட அடிக்கமுடியவில்லை. முடிவில் இந்திய அணி 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
3 போட்டியில் 2ல் வென்ற தஜிகிஸ்தான் அணி கோப்பை கைப்பற்றியது. தவிர, தஜிகிஸ்தானுக்கு எதிராக பங்கேற்ற 3 போட்டியிலும் (2019, 2025, 2026), இந்தியா தோல்வியை பதிவு செய்தது.
