ஜெனீவா: அமெரிக்காவுடன் இரண்டாம் கட்ட பேச்சுக்கு முன் ஈரான் அதிகாரிகள், ஐ.ஏ.இ.ஏ., எனப்படும் சர்வதேச அணுசக்தி முகமை அதிகாரிகளை சந்தித்து பேசினர்.
மேற்காசிய நாடான ஈரான் – அமெரிக்கா இடையே, அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சு நடந்து வருகிறது. மேற்காசிய நாடான ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்ற முதல் சுற்று பேச்சில் உடன்பாடு எட்டவில்லை.
இதையடுத்து ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் இரண்டாம் கட்ட பேச்சு இன்று நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, தங்கள் நாட்டு தொழில்நுட்ப குழுவினருடன், ஐ.நா. அணு ஆய்வு அமைப்பான ஐ.ஏ.இ.ஏ., அதிகாரிகளை நேற்று சந்தித்து பேசினார்.
ஐ.ஏ.இ.ஏ., தலைவர் ரபேல் குரோஸ் மற்றும் ஈரான் அமைச்சர் அராக்சி குழுவினர் ஆழமான தொழில்நுட்ப விவாதங்கள் நடத்தியதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா உடனான இந்தப் பேச்சு, ஈரானின் அணு திட்டத்தை கட்டுப்படுத்துவது, பொருளாதாரத் தடைகளை நீக்குவது உள்ளிட்ட விவகாரங்களை மையமாகக் கொண்டது என்பதால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
