அதிமுகவின் 21 முன்னாள் அமைச்சர்கள், 2 மா.செ.க்கள் உட்பட 23 பேர் கொண்ட அதிமுகவின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்த கையோடு, கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளையும் ஒதுக்கீடு செய்துவிட்டு தேர்தல் களத்தில் முதல் ஆளாக சென்னையிலிருந்து பிரச்சாரத்தை துவக்கிவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி. இவரின் இந்த வேகம், ஜெயலலிதா பாணியில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் விவாதித்தப்படி இருக்கின்றனர்.
தேர்தல் என வந்துவிட்டால் கூட்டணியை உருவாக்குவதும், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்துவிட்டு அதிமுகவின் வேட்பாளர்களையும் அறிவித்து விட்டு தேர்தல் பிரச்சாரத்துக்கு முதல் ஆளாக கிளம்பிவிடுவார் ஜெயலலிதா. அவரது மறைவுக்குப் பிறகு, கடந்த தேர்தல்களில் முதல் ஆளாக களத்துக்கு செல்வபவராக திமுக தலைவர் ஸ்டாலின் இருந்தார். அந்த வகையில், இந்தத் தேர்தலிலும் ஆரம்பத்திலிருந்தே தேர்தல் பணிகள் அனைத்திலும் முன்னணியில் இருந்து வந்தது திமுக. அதன் வேகத்தைப் பார்த்ததும், கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளை இறுதி செய்து விட்டு, திமுக வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டு திமுகதான் முதல் ஆளாக தேர்தல் களத்திற்கு விரைந்து செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மிக பின் தங்கியிருந்ததாக கருதப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி, சத்தமில்லாமல், ஓவர் நைட்டில் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு எண்ணிக்கையை முடிவு செய்து ஒப்பந்தம் போட்ட கையோடு தொகுதிகளையும் ஒரே சிட்டிங்கில் இறுதி செய்ததுடன் தேர்தல் களத்தில் முதல் நபராக அடி எடுத்து வைத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. தமிழக அரசியல் கட்சிகளிடமும், அரசியல் விமர்சகர்களிடமும், தேர்தல் வியூக வகுப்பாளர்களிடமும் அதிமுகவின் வேகமான தேர்தல் பணிகள் குறித்து விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
இது குறித்து பிரபல அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் நாம் விவாதித்தபோது, ‘ஜெயலலிதா உயிருடன் இருந்த வரைக்கும் அவரது போயஸ் கார்டனில் தான் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடக்கும். அதுவும் ஒரே ஒரு சிட்டிங்தான். பலமுறை சந்தித்துப் பேசுவதெல்லாம் நடக்காது. ஒரே சிட்டிங்கில் பேச்சுவார்த்தையை இறுதி செய்துவிடுவார். அதன்பிறகு, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை அதிமுக தலைமையகத்துக்கு வரவழைத்து ஒப்பந்தம் போட வைப்பார் ஜெயலிதா. இது அவரது அதிரடி பாணி. ஒப்பந்தம் கையெழுத்தனதும், அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் நாளைக்கு ரிலீஸாகி விடும். நீங்களும் உங்களது வேட்பாளர் லிஸ்ட்டை தாமதிக்காமல் ரிலீஸ் செய்துவிடுங்கள் என அறிவுறுத்திவிட்டு பிரச்சாரத்தை ஆரம்பித்து விடுவார் ஜெயலலிதா. அதே பாணியைத்தான் இப்போது எடப்பாடியும் கையாண்டிருக்கிறார்’’ என்கிறார்கள்.
இதற்கிடையே தேர்தல் வியூக வகுப்பாளர்களிடம் திமுக மற்றும் அதிமுகவின் கூட்டணிக்கட்சிகளுக்கான தொகுதி உடன்பாடுகள் குறித்த விவாதங்களும் சூடு பிடித்து வருகின்றன. இது குறித்து அவர்களிடம் விசாரித்தபோது, ‘திமுக கூட்டணியிலுள்ள தேசிய கட்சியான காங்கிரஸ், முதல்வர் ஸ்டாலினிடம் அடம் பிடித்து கடந்த முறை ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகளுக்கு கூடுதலாக 3 சீட் பெற்று 28 சீட்டை கைப்பற்றிக் கொண்டது. காங்கிரஸ் வெற்றி பெற்ற 17 தொகுதிகளுடன் கூடுதலாக 3 சீட் தந்து 20 சீட்டுகளுக்குள் காங்கிரஸை முடக்க வேண்டும் என திமுக திட்டமிட்டிருந்தது. ஆனால், காங்கிரசை தக்க வைத்துக்கொள்ள 28 சீட்டுகள் திமுக கொடுக்க வேண்டியதாயிற்று. அந்த வகையில், அதிமுக கூட்டணியில் தேசிய கட்சியான பாஜக இருக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 28 சீட்டிலிருந்து 1 சீட்டாவது பெற வேண்டும் என கங்கணம் கட்டியது பாஜக. ஆரம்பத்தில், அதிமுகவும் பாஜகவும் சரி பாதி எண்ணிக்கையில் தொகுதிகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என பாஜக தலைமை நிர்பந்தம் செய்தது. பிறகு, அந்த எண்ணிக்கை 80, 70, 60 என குறைந்து இறுதியில் 50 இடங்களாவது வேண்டும் என்று அதிமுகவிடன் மல்லுக்கட்டியது பாஜக. ஆனால், அதனை ஏற்க மறுத்த எடப்பாடி பழனிச்சாமி, அதிகபட்சம் 25 சீட்டுகள் மட்டுமே கொடுக்கப்படும், கூட்டணிக் கட்சிகளுக்கு நாங்கள் பகிர்ந்து தந்து விடுகிறோம் என கறாராக தெரிவித்தார்.
இதனை ஏற்க மறுத்தது பாஜக தேசிய தலைமை. டெல்லிக்கு அழைத்து எடப்பாடிக்கு ஏக அழுத்தத்தை கொடுத்துப் பார்த்தார் அமித் ஷா. ஆனாலும், அதற்கு மசியாமல், அடம் பிடித்த எடப்பாடியிடம் அட்லீஸ்ட் காங்கிரஸ் பெற்றதை விட கூடுதலாக 1 சீட் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் அமித் ஷா. ஆனால், அவரையும் கன்வின்ஸ் பண்ணி, எதற்காக 1 சீட் அதிகமாக பாஜக கேட்கிறதோ, அதே அளவு கோளில் காங்கிரஸ் பெற்றதை விட 1 சீட்டை குறைத்து 27 சீட்டுக்கு பாஜகவை ஒப்புக் கொள்ள வைத்து கூட்டணிக்கான தொகுதி பங்கீடுகளை முடித்தார் எடப்பாடி பழனிச்சாமி. அந்த வகையிலும், திமுகவின் ஸ்ட்ரேட்டர்ஜியை விட எடப்பாடியின் ஸ்டேட்டர்ஜி அடேங்கப்பா என்பதாக இருக்கிறது’ என்று விவரிக்கிறார்கள் தேர்தல் வியூக வகுப்பாளர்கள்.
