ஜெய்ப்பூர்: ராஜஸ்தானைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், 138 பட்டங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.
ராஜஸ்தானில் முதல்வர் பஜன் லால் சர்மா தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஜுன்ஜுன் மாவட்டத்தின், கிரோத் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தசரத் சிங், 55.
கடந்த, 198 8-ல் நம் ராணுவத்தில் சேர்ந்த இவர், பஞ்சாப், ஜம்மு – -காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில், 16 ஆண்டுகள் பணியாற்றி, 2004-ல் ஓய்வு பெற்றார்.
ராணு வத்தில் இருந்த போது, தனக்கு கிடைத்த இரண்டு மாத விடுமுறை காலத்தை படிக்க பயன்படுத்திய அவர், ஓய்வுக்கு பின், முழுவீச்சில் தன் கல்விப் பயணத்தை தொடர்ந்தார். தற்போது அவர், 138 பட்டங்களை பெற்று சாதனை படைத்து உள்ளார்.
இதில், முனைவர் பட்டங்கள் மூன்று, முதுநிலை பட்டங்கள் – 46, இளநிலை பட்டங்கள் ஏழு; ராணுவ ஆய்வுகள் தொடர்பான பட்டங்கள் ஏழு; சான்றிதழ் படிப்புகள், 52 அடங்கும்.
இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், சர்வதேச புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உள்ளிட்ட அமைப்புகளிடமிருந்து, 11 உலக சாதனை அங்கீகாரங்களை அவர் பெற்றுள்ளார்.
இது குறித்து, தசரத் சிங் கூறுகையில், ”என் குடும்பத்தில் கல்வி பின்னணி ஏதுமில்லை. அரசுப் பள்ளியில், 10-ம் வகுப்பு முடித்த பின், பொருளாதார சூழலால் கல்லுாரி படிப்பு என்பது எட்டாக்கனியாக இருந்தது.
”ஆனால், ராணுவத்தில் பணியாற்றிய போதும் கல்வி முழுமை அடையவில்லை என்ற உணர்வு எனக்குள் இருந்தது. அதனால், ஓய்வுக்கு பின்னரும் படித்துக் கொண்டே இருக்கிறேன்,” என்றார்.
வெறும் பட்டங்களை மட்டும் குவிக்காமல், சக ராணுவ வீரர்களுக்காக பணியாற்ற விரும்பிய தசரத் சிங், சட்டப் படிப்புகளை முடித்தார்.
தற்போது ராணுவத்தின், ‘சப்த சக்தி கமாண்ட்’ பிரிவில் சட்ட ஆலோசகராக பணியாற்றி வரும் அவர், பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற வீரர்களின் சட்ட ரீதியான சிக்கல்களுக்கு தீர்வு கண்டு வருகிறார்.
விடாமுயற்சியும், தணியாத கல்வி ஆர்வமும் இருந்தால், எந்த வயதிலும் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு, தசரத் சிங் ஒரு சிறந்த உதாரணம்.
