ஜெய்ப்பூர்: ‘வரதட்சணையாக சமையல் காஸ் சிலிண்டர் கேட்டு துன்புறுத்தினால், அந்த குடும்பத்தின் காஸ் இணைப்பு துண்டிக்கப்படும்’ என, ராஜஸ்தான் அரசு எச்சரித்துள்ளது.
மேற்காசியாவில் ஏற்பட்ட மோதல்களால், கச்சா எண்ணெய் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், தட்டுப்பாடு ஏற்படும் என்ற பீதியில், நாடு முழுதும் மக்கள் போட்டிப் போட்டு, சமையல் காஸ் சிலிண்டர்களை வாங்கி வருகின்றனர். பெட்ரோல் பங்க்குகளிலும் பெருமளவு கூடினர்.
இந்நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் பஜன் லால் சர்மா தலைமையிலான ராஜஸ்தான் அரசு, ‘வரதட்சணையாக சமையல் காஸ் சிலிண்டர் கேட்டு துன்புறுத்தினால், அந்தக் குடும்பத்தின் காஸ் இணைப்பு துண்டிக்கப்படும்’ என, எச்சரித்துள்ளது.
இது குறித்து, அரசு அதிகாரிகள் கூறியுள்ளதாவது: தட்டுப்பாடு ஏற்படும் என்ற அபாயத்தால், வரதட்சணையாக சமையல் காஸ் சிலிண்டர்களை கேட்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. வரதட்சணையாக சிலிண்டர் கேட்டு மருமகளை துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அந்த குடும்பத்தின் காஸ் இணைப்பு துண்டிக்கப்படும். ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு ஒரு சிலிண்டர் மட்டுமே வழங்கப்படும். இதை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணிப்பர். இதன் மூலம் காஸ் சிலிண்டர் முறைகேடாக பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
